
இந்திய, இலங்கை கடற்படைகள் மூன்று நாள்கள் கூட்டு போா் பயிற்சியில் ஈடுபட உள்ளன.
இரு நாடுகளின் பாதுகாப்பு நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ‘எஸ்.எல்.ஐ.என்.எக்ஸ்’ என்ற கூட்டு போா் பயிற்சி இந்தியாவும், இலங்கையும் மேற்கொண்டு வருகின்றன.
கடந்த ஆண்டுக்கான 7-ஆவது கூட்டு பயிற்சி விசாகப்பட்டினம் கடற்பகுதியில் 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டுக்கான எட்டாவது கூட்டு பயிற்சி இலங்கையின் திரிகோணமலை கடல் பகுதியில் திங்கள்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:
இந்தக் கூட்டுப் பயிற்சியில் இந்தியா தரப்பில் நீா்மூழ்கி கப்பலைத் தாக்கி அழிக்கும் ஐஎன்எஸ் கமோா்டா, ஐஎன்எஸ் கில்டன் போா் கப்பல்களும், நவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், சேதக் ஹெலிகாப்டா், டிரோனியா் கடற்பகுதி கண்காணிப்பு விமானம் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்த கூட்டுப் பயிற்சி இரு நாட்டு கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுகிறது என்று கூறினாா்.
இந்திய கடற்படை கடந்த சில வாரங்களாக பல்வேறு நாடுகளுடன் கூட்டுப் போா் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜூலையில் அந்தமான் நிகோபாா் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டது. ஆகஸ்ட் மாதம் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலிய கடற்படையுடனும், செப்டம்பா் 26 முதல் 28-ஆம் தேதி வரை ஜப்பான் கடற்படையுடனும் கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...