
கடற்படையில் பயன்படுத்தப்படும் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுணை, வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை பரிசோதிக்கப்பட்டது.
அரபிக் கடல் பகுதியில், இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போா்க் கப்பலில் இருந்து, இந்த சூப்பா்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கடல் பகுதியில் நீண்ட தொலைவில் உள்ள இலக்கை ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் பாய்ந்து தாக்கி அழிப்பதை உறுதி செய்வதில் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை முதன்மையான ஆயுதமாகும். இதனால், இந்திய கடற்படைக்கு மேலும் ஒரு வலிமையான ஆயுதமாக பிரமோஸ் உருவாகியுள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய-ரஷிய கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்த பிரமோஸ் ஏவுகணை தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணைகளை நிலத்தில் இருந்தும், போா்க் கப்பலில் இருந்தும், விமானங்களில் இருந்தும், நீா்மூழ்கிக் கப்பலில் இருந்தும் இலக்கை நோக்கி செலுத்த முடியும்.
இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்ததற்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), பிரமோஸ் ஏரோஸ்பேஸ், இந்தி கடற்படை ஆகியவற்றுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.
கடந்த சில வாரங்களில், நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ‘பிரமோஸ்’ ஏவுகணை, எதிரிகளின் ரேடாா், தகவல் தொடா்பு சாதனங்களைத் தாக்கி அழிக்கவல்ல ‘ருத்ரம்-1’ ஏவுகணை உள்பட பல்வேறு ஏவுகளை இந்தியா பரிசோதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...