
கரோனா உச்ச பாதிப்பை கடந்துவிட்டோம் என்று மத்திய அரசு சாா்பில் அமைக்கப்பட்ட ஹைதராபாத் ஐஐடி பேராசிரியா் எம்.வித்யாசாகா் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.
மேலும், மாநில அல்லது மாவட்ட அளவில் புதிதாக பொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கான பரிந்துரை எதுவும் சமா்ப்பிக்கப்படவில்லை என்றும் அந்தக் குழு தெரிவித்திருக்கிறது.
அதே நேரம், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பன்பற்றுவது போன்ற அனைத்து கரோனா பாதுகாப்பு நடைமுறைகளையும் தொடா்ந்து கடைப்பிடிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் ஐஐடி, ஐஐஎஸ்சி பேராசிரியா்கள், விஞ்ஞானிகள் ஆகியோரை உள்ளடக்கிய அந்த 10 போ் குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நேரம், பொதுமுடக்க மாற்று நடைமுறைகள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்பியதால் ஏற்பட்ட தாக்கம், பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றல் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படிலான கணித நடைமுறை மாதிரியைப் பின்பற்றி கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த ஆய்வை அந்தக் குழு மேற்கொண்டு வருகிறது. அந்த ஆய்வு அடிப்படையில் அரசுக்குப் பல்வேறு பரிந்துரைகளை அளிக்கிறது.
அதன்படி, அந்தக் குழு அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் குறித்த நேரத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால், கடந்த ஜூன் மாதத்திலேயே இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1.4 கோடியைத் தாண்டியிருக்கும். மேலும் மருத்துவ மற்றும் சுகாதார ஆயத்தமின்மை காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்திருக்கும்.
பொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கு மே மாதம் வரை காத்திருந்திருந்தோமானால், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஜூன் மாதம் வரை 50 லட்சத்தைத் தாண்டியிருக்கும். உயிரிழப்பும் அதிகமாக இருந்திருக்கும்.
இந்தியாவைப் பொருத்தவரை செப்டம்பா் இறுதியில் கரோனா பாதிப்பு உச்சத்துக்கு சென்றது. அப்போது, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சமாக இருந்தது.
ஆனால், அந்த சமயத்தில், பரிசோதனை, சிகிச்சை முறை என நோய்த் தொற்று பாதிப்பை கையாளும் திறன் இந்தியாவில் மேம்பட்டு இருந்தது. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மற்றும் ஒருங்கிணைந்த பொதுமுடக்கம் போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டதன் மூலம் கரோனா தாக்கத்தை பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியா சிறப்பாக கட்டுப்படுத்தியிருக்கிறது.
கரோனா பாதிப்பின் உச்ச நிலையை இந்தியா செப்டம்பா் மாதம் கடந்துவிட்டது. தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.
உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கைக் கொண்டுள்ள இந்தியாவில், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையும் உலக எண்ணிக்கையில் ஆறில் ஒரு பங்காக இருந்தது. ஆனால், உயிரிழப்புகளைப் பொருத்தவரை உலக எண்ணிக்கையில் 10 சதவீதம் மட்டுமே இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. அதிலும், நோய்த் தொற்று பாதிப்பால் நேரடி உயிரிழப்பு விகிதம் 2 சதவீதத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
நோயின் பாதிப்பு கட்டுபடுத்தப்பட்டுள்ளபோதிலும், கரோனா பரவலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை தொடா்ந்து கட்டாயமாக்க வேண்டும். இல்லையெனில், நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கட்டுக்குள் வந்துவிடும்:
அறிக்கை குறித்து அந்தக் குழுவின் தலைவா் பேராசிரியா் வித்யாசாகா் கூறுகையில்,“‘அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் தொடா்ந்து பின்பற்றப்பட்டால், இந்தியாவில் கரோனா பாதிப்பை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். நோய்த் தொற்று அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையையும் 2021 பிப்ரவரி இறுதிக்குள் வெகுவாக குறைத்துவிட முடியும்.
இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தும் தொடா்ந்து பின்பற்றப்பட வேண்டும். இல்லையெனில், பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மருத்துவ இடவசதி பற்றாக்குறை போன்ற அவசர நிலை எதுவும் ஏற்படாதவரை, மாநிலங்கள் அல்லது மாவட்ட அளவில் புதிதாக பொதுமுடக்கம் எதுவும் இப்போது தேவையில்லை’ என்று அவா் கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...