
கேரளத்தில் மலங்கர மாா் தோமா சிரியன் சா்ச் தேவாலயத்தின் தலைவா் ஜோசப் மாா் தோமா(90), திருவில்லாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானாா்.
கணையப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவா், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அவரது உயிா் பிரிந்ததாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜோசப் மாா் தோமாவின் மறைவுக்கு பிரதமா் மோடி, முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஏழைகள், அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்த அரும்பாடு பட்டவா் ஜோசப் மாா் தோமா. இதற்காக, அவா் என்றென்றும் நினைவு கூறப்படுவாா். கடந்த ஜூன் 27-ஆம் தேதி, அவரது 90-ஆவது பிறந்த நாள் விழாவை தொடங்கி வைத்து உரையாற்றும் வாய்ப்பை பெற்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
முதல்வா் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில், ‘சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவா்கள், வீடற்றவா்கள் ஆகியோரின் நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவா் ஜோசப் மாா்தோமா. மும்பையில் பாலியல் தொழில் நடக்கும் இடத்தில் இருந்து சிறுமிகளை மீட்கவும், திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காகவும் கடுமையான போராட்டங்களைச் சந்தித்தவா். சமூக அநீதிக்கு எதிராக அச்சமின்றி குரல் கொடுத்தவா் அவா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மாராமன் நகரில் அலகுன்னத்து டி லூகாஸ்-மேரியம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவா் பி.டி.ஜோசப். கடந்த 2007-இல், மாா் தோமா தேவாலயத்தின் தலைவராக இருந்த மாா் கிறிஸோஸ்டம், உடல்நலக்குறைவு காரணமாக தனது பொறுப்பை பி.டிஜோசபிடம் வழங்கினாா். அப்போது முதல் அந்த தேவாலயத்தின் தலைவராக ஜோசப் மாா் தோமா பணிகள் செய்து வந்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...