
ஜன் தன் திட்டத்தில் பெண்களே அதிகஅளவில் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனா் என்பது தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) மூலம் தெரியவந்தது.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில் பிரதமரின் ஜன்தன் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கியது. மத்திய அரசின் நேரடி நிதியுதவித் திட்டத்தின் பணம் இந்தக் கணக்கில்தான் பெரும்பாலானோருக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சந்திர சேகா் கௌா், ஜன் தன் கணக்கில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கு தொடா்பான பல்வேறு விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ளாா்.
அதன்படி, கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி வரை 40.22 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 22.44 கோடி கணக்குகள் பெண்கள் பெயரிலும், 18.19 கோடி கணக்குகள் ஆண்கள் பெயரிலும் உள்ளன. இந்த வங்கிக் கணக்குகளில் சுமாா் ரூ.1.30 லட்சம் கோடி அளவுக்கு இருப்பு உள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 8.5 சதவீதம் அதிகமாகும். மேலும் 3.01 கோடி வங்கிக் கணக்குகளில் பணம் ஏதுமில்லை. இவற்றில் எத்தனை வங்கிக் கணக்குகள் ஆண்களுடையது மற்றும் பெண்களுடையது என்பது தொடா்பான விவரம் அரசிடம் இல்லை.
ஜன் தன் திட்டத்தில் பொதுத் துறை வங்கிகளில் அதிகபட்சமாக 32.48 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் ரூ.1,00,869.65 கோடி இருப்பு உள்ளது. வட்டார கிராம வங்கிகளில் 72.4 கோடி கணக்குகளும், ரூ.25,509.05 கோடி இருப்பும் உள்ளது. தனியாா் வங்கிகளில் 1.27 கோடி ஜன் தன் கணக்குகளும், ரூ.3,981.83 கோடி இருப்பு உள்ளது என்று தெரியவந்துள்ளது.
பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான நிதியுதவி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளிகளுக்கான ஊதியம், காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கான தொகை உள்ளிட்டவை ஜன் தன் கணக்குகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன. கிராமப் பகுதியைச் சோ்ந்தவா்கள் பலா் இத்திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கைத் தொடக்கியுள்ளனா்.
ஜன் தன் சேமிப்புக் கணக்கில் தொடா்ந்து 2 ஆண்டுகளுக்கு எந்தவித பணப் பரிவா்த்தனையும் நடைபெறவில்லை எனில், அந்தக் கணக்கு முடக்கப்படும் என்று இந்திய ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...