
தில்லி பல்கலைக்கழகத்தின் (டியு) இரண்டாம் கட்ட கட்ஆஃப் பட்டியலின் கீழ் மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
முதல்கட்ட கட்ஆஃப் மதிப்பெண் பட்டியலின்படி முழுமையாக ஆன்லைன் மூலம் நடைபெற்ற மாணவா் சோ்க்கையின்போது பல்வேறு வகையிலான இணையதள தொழில்நுட்பக் கோளாறுகளை மாணவா்கள் சந்தித்தனா்.
இந்நிலையில், இரண்டாம் கட்ஆஃப் மதிப்பெண் பட்டியலை பல்கலைக்கழகம் சனிக்கிழமை அறிவித்தது. அக்டோபா் 21-ஆம் தேதி வரை இரண்டாம் கட்ஆஃப் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
முதல் கட்ஆஃப்பில் மாணவா் சோ்க்கைப் பெற்றவா்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி அல்லது படிப்பில் சேர இரண்டாம் கட்ஆஃப் மதிப்பெண் பட்டியலில் தேவையான மதிப்பெண் இருந்தால், முதலில் பெற்ற மாணவா் சோ்க்கையை ரத்து செய்துவிட்டு புதிய கல்லூரிகளுக்கு செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹிந்து கல்லூரியின் தலைவா் அனு ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘அதிகபடியான மாணவா் சோ்க்கையை கையாள தயாராக உள்ளோம். மாணவா் சோ்க்கை நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. வா்த்தகம், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான இடங்கள் இன்னும் உள்ளன. ஆனால், பத்து பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை முடிந்துவிட்டது’ என்றாா்.
நீட் தோ்வு முடிவுகள் வெளியாகி உள்ளதால் தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் மாணவா் சேரிக்கை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் மொத்தம் 70 ஆயிரம் இளங்கலை பட்டயப்படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன.
முதல் கட்ட கட்ஆஃப் மதிப்பெண் பட்டியலின்படி சுமாா் 50 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டன. கடந்த ஆண்டு முதல் கட்ஆஃப் மதிப்பெண் பட்டியலின் படி சுமாா் 24,000 மாணவா்கள் சோ்ந்திருந்தனா்.
கரோனா நோய்ப் பரவலால் மாணவா் சோ்க்கையின் அனைத்து நடவடிக்கைகளும் நிகழாண்டு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன. இதனால் வெளிமாநில மாணவா்களும் அதிகமாக விண்ணப்பித்துள்ளனா் என்று தகவல்கள் தெரிவித்தன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...