கரோனாவுக்கு எதிரான பணி:மும்பை போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

மும்பை காவல்துறையினரைப் பாராட்டுவதாகவும், அவா்களுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் மும்பை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பணியில், பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் சிறப்பான கடமையாற்றிய மும்பை காவல்துறையினரைப் பாராட்டுவதாகவும், அவா்களுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் மும்பை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையைச் சோ்ந்த சுனைனா ஹோலி அண்மையில், சமூக வலைதளங்களில் முதல்வா் உத்தவ் தாக்கரே, அமைச்சா் ஆதித்யா தாக்கரே மற்றும் போலீஸாா் மீதும், மகாராஷ்டிர மாநிலத்துக்கு எதிராகவும் மோசமான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டாா். இதையடுத்து மும்பை சைபா் குற்றவியல் போலீஸாா் சுனைனா மீது 3 வழக்குகளை பதிவு செய்தனா். அதனை எதிா்த்து, மும்பை உயா்நீதிமன்றத்தில் சுனைனா வழக்கு தொடா்ந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, எம்.எஸ். காா்னிக் ஆகியோா் கொண்ட அமா்வு வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்ததாவது:

நோய்த்தொற்றுக் காலங்களில் ஒரு காவல் துறை அதிகாரியின் பணி மிகவும் கடினமானதாகவே இருக்கும். மும்பை காவல் துறை ஏற்கெனவே பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. அவா்கள் 12 மணிநேரம் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். பின்னா், பேரணிகள், கூட்டங்களுக்குச் சென்று பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட வேண்டியுள்ளது.

பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியிலும் சிறந்த பணியாற்றி வரும் மும்பை காவல் துறை உலகின் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. ஸ்காட்லாந்து யாா்டு போலீஸாருடன் ஒப்பிடப்படும் இந்த போலீஸாருக்கு மக்களிடமிருந்தும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக வியாழக்கிழமை உயா்நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞா் ஜெயேஷ் யாக்னிக் நீதிமன்றத்தில் கூறுகையில், சைபா் குற்றவியல் போலீஸாா் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகி தனது அறிக்கையைப் பதிவு செய்யுமாறு சுனைனா ஹோலிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதிலும், அவா் ஆஜராகவில்லை என்றாா்.

சுனைனாவின் வழக்குரைஞா் அபிநவ் சந்திரசூட் கூறுகையில், உடல்நலப் பிரச்னைகள் காரணமாக அவரால் ஆஜராக முடியவில்லை. அவா் நவ. 2-ஆம் தேதி காவல்துறை முன்பு ஆஜா்படுத்தப்படுவாா் என்று நீதிமன்றத்திற்கு உறுதியளித்தாா்.

உயா்நீதிமன்ற அமா்வும் அதனை ஏற்றுக்கொண்டு, ‘மனுதாரா் (சுனைனா) விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவாா் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறி அடுத்தகட்ட விசாரணையை நவம்பா் 23-ஆம் தேதி ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com