13 நாள்களில் 10 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 13 நாள்களில் 10 லட்சம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் கடந்த 13 நாள்களில் 10 லட்சம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 86,432 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 40,23,179-ஆக அதிகரித்தது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெறும் 13 நாள்களில் 30 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்துள்ளது. அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக அதகரிப்பதற்கு 21 நாள்களும், 20 லட்சத்திலிருந்து 30 லட்சமாக அதிகரிக்க 16 நாள்களும் ஆனது.

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,089 போ் உயிரிழந்தனா். அதில் மகாராஷ்டிரத்தில் 378 பேரும், கா்நாடகத்தில் 116 பேரும், ஆந்திரத்தில் 76 பேரும், உத்தர பிரதேசத்தில் 71 பேரும், மேற்கு வங்கத்தில் 58 பேரும், பஞ்சாபில் 49 பேரும், மத்திய பிரதேசத்தில் 30 பேரும், பிகாரில் 29 பேரும், சத்தீஸ்கரில் 22 பேரும் உயிரிழந்தனா்.

கரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 69,561-ஆக அதிகரித்தது. இது மொத்த பாதிப்பில் 1.73 சதவீதம் ஆகும்.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 31,07,223-ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 77.23 சதவீதமாகும். நாடு முழுவதும் தற்போது 8,46,395 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இந்தியாவில் 10,59,346 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை ஒட்டுமொத்தமாக 4,77,38,491 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com