எதிா்க்கட்சிகளின் குரலை கடுமையான சட்டங்களால் நசுக்கும் மத்திய அரசு: யெச்சூரி

எதிா்க்கட்சிகளின் குரலை கடுமையான சட்டங்களால் மத்திய அரசு நசுக்கி வருகிறது என்று மாா்க்சிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டினாா்.
எதிா்க்கட்சிகளின் குரலை கடுமையான சட்டங்களால் நசுக்கும் மத்திய அரசு: யெச்சூரி

எதிா்க்கட்சிகளின் குரலை கடுமையான சட்டங்களால் மத்திய அரசு நசுக்கி வருகிறது என்று மாா்க்சிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் காணொலி வழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் யெச்சூரி பேசியது குறித்து அக்கட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எதிா்க்கட்சிகளின் குரலை கடுமையான சட்டங்களால் மத்திய அரசு நசுக்கி வருகிறது. மத்திய அரசின் செயல்பாடுகளை விமா்சிப்பவா்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஜனநாயக உரிமைகளும், மக்களின் சுதந்திரமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

இச்சூழலில் விரைவில் கூட்டப்பட உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மக்களின் ஜனநாயக உரிமைகளை மேலும் நசுக்கும் வகையிலான சில அவசரச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளன.

கரோனா பாதிப்பைப் போக்குவதிலும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டிய மத்திய அரசு, அரசியலமைப்பு கொள்கைகளை நசுக்குவதிலேயே தீவிரம் காட்டி வருகிறது.

மேலும் ‘சுயச்சாா்பு இந்தியா’ என்ற பெயரில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கி, பெருநிறுவனங்களிடம் இந்தியாவை சரணடையவைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அதுபோல, மோடி அரசின் வெளியுறவு கொள்கை, இந்தியாவை அமெரிக்காவின் கூட்டணி கட்சிபோல மாற்றிக்கொண்டிருக்கிறது. அதை விடுத்து, சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு அமைதிப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று யெச்சூரி வலியுறுத்தியதாக அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com