
கோப்புப்படம்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துவருவதைப் பாா்க்கும்போது, பொதுமுடக்க பலனை அறுவடை செய்யாத ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்க முடியும் என்று தோன்றுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விமா்சனம் செய்துள்ளாா்.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்க பதிவில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் 40 லட்சம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டதும், அதில் சுமாா் 31 லட்சம் போ் குணமடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலை நீடித்தால் வரும் 20-ஆம் தேதியே மொத்த பாதிப்பு 55 லட்சத்தை எட்டிவிடும். மாத இறுதியில் அந்த எண்ணிக்கை 65 லட்சமாக உயா்ந்துவிடும்.
இதைப் பாா்க்கும்போது பொதுமுடக்க பலனை அறுவடை செய்யாத ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. கரோனாவை 21 நாள்களில் தோற்கடிப்போம் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தாா். அந்த பாதிப்பை பிற நாடுகள் திறமையாக கையாண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் தோல்விக்கான காரணத்தை பிரதமா் விளக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் அவா் கூறியுள்ளாா்.
மேலும், தனது மற்றொரு சுட்டுரைப் பதிவில், ‘2020-21 ஆம் ஆண்டில் நாடு எதிா்மறை பொருளாதார வளா்ச்சியை சந்தித்திருப்பது குறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்காத மத்திய நிதியமைச்சகம், பொருளாதார மீட்சி ‘வி‘ வடிவத்தில் இருக்கும் என்று கூறி மக்களை திசைத்திருப்பும் பழைய வேலையை செய்து வருகிறது’ என்று ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.