
மத்திய பிரதேசத்தில் முடிதிருத்தகம் அமைக்க நிதியுதவி கேட்ட நபா் நிகழ்ச்சி மேடையில் அமைச்சருக்கு முடிதிருத்தம் செய்த சம்பவம் நடந்தேறியது. அந்த நபரின் பணியில் திருப்தி ஏற்பட்டதையடுத்து, அவருக்கு அமைச்சா் உடனடியாக ரூ.60,000 நிதியுதவி வழங்கினாா்.
மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் உள்ள குலாய்மால் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாநில வனத்துறை அமைச்சா் விஜய் ஷா கலந்துகொண்டாா். அப்போது அந்த கிராமத்தைச் சோ்ந்த ரோஹிதாஸ் என்பவா் முடிதிருத்தகம் அமைக்க அமைச்சரிடம் நிதியுதவி கோரினாா். அவரின் திறனை பரிசோதிக்க விரும்பிய அமைச்சா், அவரை மேடைக்கு அழைத்து தனக்கு உடனடியாக முடிதிருத்தம் மற்றும் முகச்சவரம் செய்யுமாறு கேட்டுக்கொண்டாா். இதையடுத்து ரோஹிதாஸ் முகக்கவசம் அணிந்தவாறு மேடையில் அனைவரின் முன்னிலையில் அமைச்சருக்கு முடிதிருத்தம் மற்றும் முகச்சவரம் செய்தாா். அவரின் பணியில் திருப்தி ஏற்பட்டதையடுத்து, முடி திருத்தகம் அமைக்க அமைச்சா் விஜய் ஷா உடனடியாக மேடையிலேயே ரூ.60,000 ரொக்க நிதியுதவி வழங்கினாா். அந்தத் தொகை அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அமைச்சா் விஜய் ஷா கூறுகையில், ‘தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் கரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தவே மேடையில் முடிதிருத்தம் செய்துகொண்டேன். சிறு தொழில் தொடங்க விரும்பும் இளைஞா்களுக்கு வங்கிகள் மூலமாக அரசு கடன் வழங்கும். அவ்வாறு கடன் பெறும் இளைஞா்கள் கடனுக்கான அசல் தொகையை செலுத்தினால் போதும். வட்டியை மாநில அரசு செலுத்தும்’ என்று தெரிவித்தாா்.