
மனஅழுத்தத்தை உருவாக்கும் மதிப்பெண் சான்றிதழ்: பிரதமர் மோடி உரை
மதிப்பெண் சான்றிதழ் என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சான்றிதழாகவும், குடும்பங்களுக்கு பெருமைக்குரிய சான்றிதழாகவும் உள்ளது. இதனை மாற்றவே புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக '21-ஆம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி கொள்கை' என்ற தலைப்பில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, பள்ளிகள் திறக்கப்பட்டதும், பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
எந்த மொழியைக் கற்பிக்கவோ, படிக்கவோ தேசிய கல்விக் கொள்கை தடை செய்யவில்லை. அது ஆங்கிலமாக இருந்தாலும் சரி, வேறு எந்த சர்வதேச மொழியாக இருந்தாலும் சரி, ஆனால், இந்திய மொழிகளை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறினார்.
மதிப்பெண் சான்றிதழ் என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சான்றிதழாகவும், குடும்பங்களுக்கு பெருமைகாக்கும் சான்றிதழாகவும் உள்ளது. இதனை மாற்றவே புதிய தேசியக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பல காலமாகவே, நமது கல்வி முறை என்பது மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பல்வேறு ஆர்வத்தை வளர்க்கும் வகையில் புதிய தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தைக் குறைத்து, விளையாட்டு, கண்டுபிடித்தல் மற்றும் செயலாக்க முறையில் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நமது பணி இப்போதுதான் தொடங்கியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை மூலம் சமமான, செயல்திறன் கொண்ட கல்வி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மோடி கூறினார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G