செப். 21-ல் பள்ளிகளைத் திறக்க அனுமதி: முடிவில் வேறுபடும் மாநிலங்கள்

கரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
செப். 21-ல் பள்ளிகளைத் திறக்க அனுமதி: முடிவில் வேறுபடும் மாநிலங்கள்
செப். 21-ல் பள்ளிகளைத் திறக்க அனுமதி: முடிவில் வேறுபடும் மாநிலங்கள்

கரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதாவது, பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், இந்த அனுமதியை அனைத்து மாநிலங்களும் ஒரு போல பார்க்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் கரோனா பாதிப்பு வேறுபடுவதைப் போலவே, பெற்றோரும் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் இது குறித்து பெரிதாக குழப்பம் காணப்படவில்லை. கரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்கவே முடியும் என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகக் கூறிவருகிறார்.

பிகார், மத்தியப் பிரதேச மாநில அரசுகளும் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த ஆலோசனையையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், கர்நாடகம், உ.பி., அசாம், உத்தரகாண்ட், ஆந்திரம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் 9 - 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

கேரளத்தில் செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதுபோலவே, அந்த மாநில கல்வியாளர்களும், விரைவாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியது அவசியம் என்று கருத்துக் கூறியுள்ளார்கள். எந்த வகையிலும், பள்ளி வகுப்பறைகள் போல ஆன்லைன் வகுப்புகள் அமையாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கர்நாடக அரசு, பள்ளிகள் திறப்பு குறித்து சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட முடிவு செய்துள்ளது. 

ஆந்திர மாநிலத்தில், பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களையும் தினமும் வரவழைக்கலாமா, வழக்கமான பள்ளி நேரத்தை செயல்படுத்தலாமா? அல்லது குறிப்பிட்ட பாட ஆசிரியர்களை மட்டும் குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும் வரவழைத்து பாடங்களை நடத்தலாமா என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

தெலங்கானாவும், மகாராஷ்டிரமும், பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவும் இல்லை, அதுபற்றிய ஆலோசனைகளையும் தொடங்கவில்லை. மாநிலத்தில் கரோனா நிலைமை சீரடைவதை அடிப்படையாக வைத்தே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒடிசாவில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பது குறித்த திட்டம் இல்லை. துர்கா பூஜை வரை அனைத்துக் கல்வி நிலையங்களையும் மூட மாநில அரசு  உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதமே, பள்ளிகள் திறப்பு குறித்து பேசப்பட்ட போது, தில்லி முதல்வரை நேரில் சந்தித்த பெற்றோர், தயவு கூர்ந்து பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்ததை அடுத்து, கரோனா கட்டுப்படுத்தப்படாமல் பள்ளிகள் திறக்கப்படாது என்று அரவிந்த் கேஜரிவால் உறுதி மொழி அளித்திருந்தார். தற்போதும் தில்லியில் கரோனா நிலைமை மாறவில்லை. அதேவேளை, 80% பெற்றோர் பள்ளிகள் திறப்புக்கு எதிரான கருத்தையேக் கொண்டுள்ளனர்.

ராஜஸ்தான் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. செப்டம்பரில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு பெற்றோர் - ஆசிரியர்களுக்கு ஒப்புதல் இல்லை என்றே கூறப்படுகிறது.

ஹரியாணாவில் இரண்டு அரசுப் பள்ளிகளில் சோதனை முறையில் 10 - 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவழைத்து பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com