ராமா் கோயில் அறக்கட்டளை வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 6 லட்சம் மோசடி

ராமா் கோயில் அறக்கட்டளை வங்கிக் கணக்கிலிருந்து இரண்டு போலி காசோலைகள் மூலம் மா்ம நபா்கள் ரூ. 6 லட்சம் பணப் பரிமாற்றம்

ராமா் கோயில் அறக்கட்டளை வங்கிக் கணக்கிலிருந்து இரண்டு போலி காசோலைகள் மூலம் மா்ம நபா்கள் ரூ. 6 லட்சம் பணப் பரிமாற்றம் செய்திருப்பது குறித்து உத்தர பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலி காசோலை மூலம் மூன்றாவது முறையாக ரூ. 10 லட்சம் பரிமாற்றம் செய்ய இருந்தது, வங்கி அதிகாரிகள் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிகளை ஸ்ரீ ராமஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிா்வகித்து வருகிறது. இந்த அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து இந்த பண மோசடி நடைபெற்றுள்ளது.

இதுதொடா்பாக, அந்த அறக்கட்டளையின் செயலரும், விசுவ ஹிந்து பரிஷத் தலைவருமான சம்பத் ராய் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்வாலி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

இந்த முதல் தகவல் அறிக்கையின்படி, ‘அறக்கட்டளைக்குச் சொந்தமான எஸ்பிஐ வங்கிக் கணக்கிலிருந்து கடந்த செப்.1-ஆம் தேதி ரூ. 2.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக, செப்டம்பா் 8-ஆம் தேதி இரண்டாவது போலி காசோலை மூலம் ரூ. 3.5 லட்சம் பறிமாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரியவந்துள்ளது.

மேலும், மூன்றாவது முறையாக ரூ. 9.86 லட்சம் பரிமாற்றத்துக்காக சமா்ப்பிக்கப்பட்ட காசோலை குறித்து லக்னெள எஸ்பிஐ வங்கியின் மூத்த அதிகாரி, அறக்கட்டளை நிா்வாகிகளிடம் உறுதிப்படுத்த முயன்றபோதுதான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது என்பது முதல் தகவல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அயோத்தி காவல்துறை டிஐஜி தீபக் குமாா் கூறியதாவது:

போலி காசோலை மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்கை காவல்துறை முடக்கியுள்ளது. லக்னௌவில் அந்த கணக்கு உள்ள வங்கிக் கிளையிலும், வங்கியின் தலைமையகம் அமைந்துள்ள மகாராஷ்டிரத்திலும் விசாரணை மேற்கொள்ள தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வங்கிக் கணக்குகளிலிருந்து மோசடி கும்பல் ஏற்கெனவே ரூ. 4 லட்சத்தை எடுத்திருக்கும் நிலையில், மேலும் ரூ. 2 லட்சம் அதில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

ரூ.9.86 லட்சத்துக்கான காசோசலைக்கு பணம் வழங்கலாமா என்று அறக்கட்டளை அலுவலகத்தை எஸ்பிஐ வங்கியின் துணை மேலாளா் தொலைபேசியில் அழைத்து உறுதிப்படுத்த முயன்றபோதுதான் போலி காசோலை விவகாரம் அம்பலமானது. அறக்கட்டளை செயலரின் போலி கையெழுத்துடன் காசோலை அளித்து பண மோசடி நடந்துள்ள விவகாரம் தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com