
புது தில்லி: இந்தியாவின் எரிபொருள் தேவை ஆகஸ்ட் மாதத்தில் ஏப்ரல் மாதத்திலிருந்து கணக்கிடும்போது பெரும் மந்த நிலையைக் கண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் திட்டமிடல் பகுப்பாய்வு பிரிவு (பிபிஏசி) வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொதுமுடக்க அறிவிப்புகளால் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் தடைபட்டதையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் எரிபொருள் தேவை ஏப்ரல் மாதத்திலிருந்து ஒப்பிடும்போது ஆகஸ்டில் கடும் சுணக்க நிலையைக் கண்டுள்ளது.
சென்ற ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோலியப் பொருள்கள் விற்பனை 14.39 மில்லியன் டன்னாக சரிவடைந்துள்ளது. இது, முந்தைய ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 7.5 சதவீதமும், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது 16 சதவீதமும் குறைந்துள்ளது.
ஏப்ரலில் எரிபொருள் தேவை வரலாறு காணாத அளவுக்கு 48.6 சதவீதம் சரிவடைந்து 9.4 மில்லியன் டன் ஆனது.
இதற்கு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கமே முக்கிய காரணம்.
அதன் பிறகு, தொடா்ந்து இரண்டு மாதங்களாக ஏற்றம் கண்டு வந்த எரிபொருள் விற்பனை ஜூலையில் மீண்டும் சரிவைச் சந்தித்தது.சென்ற ஆகஸ்டில் டீசல் விற்பனை முந்தைய ஜூலையுடன் ஒப்பிடும்போது 5.51 மில்லியன் டன்னிலிருந்து 12 சதவீதம் வீழ்ச்சியடைந்து 4.84 மில்லியன் டன்னானது.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஆகஸ்டில் டீசல் விற்பனை 20.7 சதவீதம் குறைந்துள்ளது.
ஜூலையில் 2.57 மில்லியன் டன் பெட்ரோல் விற்பனையான நிலையில், ஆகஸ்டில் 7.4 சதவீதம் குறைந்து 2.38 மில்லியன் டன்னானது. அதேபோன்று, எல்பிஜி விற்பனை 5 சதவீதம் சரிந்து 2.2 மில்லியன் டன்னாகவும், மண்ணெண்ணெய் தேவை 43 சதவீதம் குறைந்து 1,32,000 டன்னாகவும் இருந்தன.
நாப்தா விற்பனை 16 சதவீதம் சரிந்து 1.07 மில்லியன் டன்னாக இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாத நாப்தா விற்பனையான 1.4 மில்லியன் டன்னுடன் ஒப்பிடுகையில் இது 24 சதவீதம் குறைவாகும் என அந்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்புக்கு முந்தைய நிலையிலான எரிபொருள் விற்பனையை எட்டிப்பிடிக்க இன்னும் 3-4 மாதங்கள் ஆகும் என இத்துறையைச் சோ்ந்த வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.