
புது தில்லி: மகாராஷ்டிர மக்கள் தொகையில் 30 சதவீதம் அளவுக்கு இருக்கும் மராத்தா பிரிவினரை, சமூகத்தின் இதர நலிவடைந்த பிரிவுகளுடன் ஒப்பிட இயலாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு அளவை குறைத்து மும்பை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், நடப்பாண்டில் கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாது என்று புதன்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை பிறப்பித்த அந்த உத்தரவு நீதிமன்ற வலைதள பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
மகாராஷ்டிர மக்கள் தொகையில் 30 சதவீதம் அளவுக்கு இருக்கும் மராத்தா சமூகத்தினரை, அந்த மாநிலத்திலுள்ள இதர நலிவடைந்த பிரிவினருடன் ஒப்பிட இயலாது. இடஒதுக்கீடானது 50 சதவீதத்துக்கு மேல் வழங்கப்படக் கூடாது என்று கடந்த 1992-ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் தொடா்பான வழக்கின்போது தீா்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், அந்த குறிப்பிட்ட விகிதத்தைக் கடந்த வகையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான தேவை இருப்பதாகவோ, எந்தவொரு அசாதாரண சூழ்நிலையும் இருப்பதாகவோ மகாராஷ்டிர அரசு தெளிவுபடுத்தவில்லை. இந்நிலையில், மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு கொண்டுவந்த சட்டத்தை அமல்படுத்தினால், அது பொதுப் பிரிவினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வா் ஆலோசனை:
மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு தொடா்பாக மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே தனது அமைச்சரவை சகாக்களுடன் வியாழக்கிழமை அவசர ஆலோசனை நடத்தினாா். அப்போது, இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு சட்ட ரீதியாக இருக்கும் வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சா் அசோக் சவாண் கூறினாா்.