நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில் கடும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் மக்களவைத் தலைவர் ஓம்.பிர்லா தலைமையில் தொடங்கியது.
நாடாளுமன்றம்.
நாடாளுமன்றம்.

கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில் கடும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் மக்களவைத் தலைவர் ஓம்.பிர்லா தலைமையில் தொடங்கியது. பிரதமர் மோடி உள்ளிட்ட எம்பிக்கள் முகக்கவசம் அணிந்தபடி இதில் பங்கேற்றுள்ளனர். 

மக்களவைத் தொடங்கியதும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மக்களவை ஒருமணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது. முதல் நாளான இன்று மக்களவை காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையும், மாநிலங்களவை 3 மணி முதல் இரண 7 மணி வரையும் நடக்கிறது. அக்டோபர் 1 வரை 18 நாள்கள் நடக்கும் கூட்டத்தொடரில் 47 மசோதாக்கள் அலுவல்களுக்காக எடுக்கப்படுகின்றன. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. 

கூட்டத்தொடருக்காக மக்களவை, மாநிலங்களவையின் இருக்கைகள், கதவுகள் உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின்போது பெரும்பாலான நடவடிக்கைகளை எம்.பி.க்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எம்.பி.க்கள் அமா்வதற்காக சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தொடா் நடைபெறும்போது எம்.பி.க்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தின் 40 இடங்களில் கை சுத்திகரிப்பான் வசதி செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, கரோனா முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். உலகின் எங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் சோதனைகளை எதிர்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். நாடு ஒன்றுபட்டு இந்திய ராணுவ வீரர்களுக்கு வலிமை அளிக்க வேண்டும். 

நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எம்பிக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com