மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் தாக்கல்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்துறை தொடா்பான 3 மசோதாக்கள் மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்துறை தொடா்பான 3 மசோதாக்கள் மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

‘விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா’, ‘விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா’, ‘அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா’ ஆகிய அந்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில், தற்போது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை, பெருநிறுவனங்களுக்கு ஆதரவானவை என்று குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார். 

இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சோ்ந்த ஹா்சிம்ரத் கௌா் தனது மத்திய அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ள நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதை அடுத்து மாநிலங்களவையில் வேளாண் மசோதா சிக்கலின்றி நிறைவேறுவது உறுதியாகி உள்ளது. 

அதே நேரத்தில், அந்த மசோதாக்களை நிறைவேற்ற மாநில கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்களின் ஆதரவைத் திரட்டும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறக் கூடிய வகையில் போதிய எண்ணிக்கையிலான உறுப்பினா்கள் ஆதரவு மத்திய அரசுக்கு இருந்தாலும், மாநிலங்களவை பாஜக உறுப்பினர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை அவைக்கு கட்டாயம் வருகை தர வேண்டும் என கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். 

இதனிடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதைப் பாராட்டி உள்ள பிரதமர் நரேந்திர மோடி, இவை வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவும், விவசாயிகளையும் வேளாண் துறையையும் இடைத்தரகர்கள் மற்றும் பிற இடையூறுகளிலிருந்து விடுவிக்கும் என்று கூறினார். மேலும் இந்த வேளாண் சீர்திருத்தங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்பதற்கான புதிய பாதைகள் திறக்கப்படும் என்றும், இது அவர்களின் விளைபொருள்களுக்கு அதிக லாபம் தரும். விவசாயிகள் மட்டுமின்றி நுகா்வோரும் பயன்பெறுவா் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com