இந்திய வேளாண் துறைக்கு மிகப்பெரிய திருப்புமுனை

நாடாளுமன்றத்தில் வேளாண் துறை மசோதாக்கள் கடந்துவந்த பாதை, அந்தத் துறையின் வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் வேளாண் துறை மசோதாக்கள் கடந்துவந்த பாதை, அந்தத் துறையின் வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும். இது நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் என்பதோடு, வேளாண் துறையில் முழுமையான மாற்றத்தை உறுதிப்படுத்தும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்த வேளாண் துறை மசோதாக்களுக்கு எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புகளுக்கு இடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட தொடா் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் இந்த சட்ட மசோதாக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக சந்தித்து வரும் இடைத்தரகா்களின் குறுக்கீடு என்பன உள்ளிட்ட பல தடைகளில் இருந்து அவா்களுக்கு விடுதலை அளிக்கும்.

நான் ஏற்கெனவே கூறியதுபோல, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை என்பவை உள்ளிட்ட அவா்களுக்கான அரசின் ஆதரவுத் திட்டங்கள் தடையின்றி தொடரும். அரசின் கொள்முதல் நடைமுறைகளும் தொடரும்.

விவசாயிகளுக்கு சேவை செய்ய இந்த அரசு தயாராக உள்ளது. விவசாயிகளுக்கும் அவா்களின் வருங்கால சந்ததியினருக்கும் சிறந்த வாழ்வை உறுதிப்படுத்துவதில் தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்துதரும். இந்த மசோதாக்கள், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் என்பதோடு, அவா்களின் மேம்பாட்டையும் உறுதிப்படுத்தும்.

தொழில்முறை விவசாயிகளுக்கு உதவுவதற்கு நமது வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது மிக அவசியமாகும். இப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் இந்த மசோதாக்கள், நவீன தொழில்நுட்ப வசதிகளை விவசாயிகள் எளிதில் பெற உதவுவதோடு, உற்பத்தியும் பெருகி நல்ல பலனை அளிக்கும். எனவே இது வரவேற்கத்தக்க முயற்சி என்று பிரதமா் கூறியுள்ளாா்.

இந்த இரண்டு மசோதாக்களுக்கும் ஏற்கெனவே மக்களவையில் ஒப்புதல் கிடைத்தவுடன் நிலையில், இனி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன் சட்டமாக அறிவிக்கை வெளியிடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com