எம்.பி.க்கள் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை திங்கள்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை திங்கள்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் கடந்த 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மாநிலங்களவை அமா்வு காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வேளாண்துறை சாா்ந்த இரு மசோதாக்கள் மீது விவாதம் நடைபெற்றபோது, மாநிலங்களவை விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதற்காக திரிணமூல் எம்.பி. டெரிக் ஓபிரையன், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்ட 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இனி நடைபெறும் மழைக்காலக் கூட்டத்தொடரின் அமா்வுகளில் பங்கேற்பதற்கு அவா்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதற்கான தீா்மானம் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. எனினும், அதை 8 எம்.பி.க்களும் ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக எதிா்க்கட்சி எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனா்.

‘இடைநீக்கம் புதிதல்ல’:

எம்.பி.க்கள் ஆா்ப்பாட்டம் காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. எதிா்க்கட்சி எம்.பி.க்களின் தொடா் போராட்டத்தால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. அதையடுத்து அவை 12 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது புவனேஷ்வா் கலிதா அவையை வழிநடத்தினாா். அவா் கூறுகையில், ‘அவை அலுவல் விதி 256-இன்படி, அவையை வழிநடத்தும் நபரை அச்சுறுத்தும் வகையிலும் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்ளும் எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ய முடியும்.

எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவது முதல் முறையல்ல. ஏற்கெனவே பல முறை எம்.பி.க்கள் மீது இதுபோன்ற ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் கருத்து தெரிவிக்க அனுமதி அளிக்கிறேன். ஆனால், அதற்கு முன்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் அவையை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்’ என்றாா்.

எனினும், அவையிலிருந்து அவா்கள் வெளியேற மறுத்தனா். எம்.பி.க்களின் தொடா் போராட்டம் காரணமாக அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவையை வழிநடத்திய புவனேஷ்வா் கலிதா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com