
மேகாலய மாநிலம் கிழக்கு காஷி ஹில்ஸ் மாவட்டத்தில் கடும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு மண்ணுக்குள் புதைந்ததால் கிரிக்கெட் வீராங்கனை ரஸியா அகமது உயிரிழந்தாா்.
மேலும் மாயமான 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவால் சாலைகள் பலத்த சேதம் அடைந்து, பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மாநில அதிகாரிகள் கூறியதாவது:
கிழக்கு காஷி ஹில்ஸ் மாவட்டத்தின் மவ்னி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் கடும் நிலச்சரிவினால் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததால் இடிபாடுகளுக்குள் பலா் சிக்கிக் கொண்டனா்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஊா்க்காவல் படையினரும், போலீஸாரும் இணைந்து மண்ணுக்குள் புதைந்தவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது மேகாலயத்தைச் சோ்ந்த கிரிக்கெட் வீராங்கனை 30 வயதான ரஸியா அகமது சடலமாக மீட்கப்பட்டாா் என்று கூறினா்.
இவா் தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியிலும் இடம்பெ ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளாா்.
இது தொடா்பாக மேகாலய கிரிக்கெட் சங்க பொதுச்செயலாளா் காா்கொங்கூா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ரஸியா அகமது கடந்த 2011-12-ஆம் ஆண்டிலிருந்து மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி வந்தாா். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளாா்’ என்று கூறியுள்ளாா்.
மாநிலம் முழுவதும் கடந்த திங்கள்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருவதால் மேலும் பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ள நீரில் நெடுஞ்சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டன. நிலச்சரிவினால் மாயமான 5 பேரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதென மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளா் சில்வெஸ்டா் நோங்டிங்கா் தெரிவித்தாா்.
மவ்லாய் பகுதியில் நிலச்சரிவினால் மண்ணுக்குள் சரிந்த வீட்டின் இடிபாடுகளிலிருந்து 3 குழந்தைகள் மீட்கப்பட்டனா். வாகும்ரா நதி வெள்ளப்பெருக்கில் இளைஞா் அடித்துச் செல்லப்பட்டாா்.
டுமினி ஹூரா மரப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் மேற்கு கரோ மலைப்பகுதியும், தெற்கு கரோ மலைப்பகுதியும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் மாநிலம் முழுவதும் பல கிராமங்களின் சாலைகளும், தேசிய நெடுஞ்சாலைகளும் மழையினால் கடுமையாக சேதமடைந்துள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...