
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்சவுடன் உரையாடியதில் பெருமகிழ்ச்சியடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச ஆகியோர் காணொலி வாயிலாக இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தினர். ராஜபட்ச இலங்கை பிரதமரான பிறகு இருவரும் ஆலோசனையில் ஈடுபடுவது இதுவே முதன்முறை.
இதுபற்றி பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் தமிழில் பதிவிட்டிருப்பதாவது:
"எனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபட்சவுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன். அபிவிருத்தி, பொருளாதார உறவு, சுற்றுலாத் துறை, கல்வி, கலாசாரம், பரஸ்பர நலன் அடிப்படையிலான பிராந்திய & சர்வதேச விவகாரங்கள் உட்பட தனித்துவமிக்க இந்திய-இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து மீளாய்வு செய்தோம்.
இந்திய இலங்கை பௌத்த உறவை மேம்படுத்த அமெரிக்க டாலர் 15 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை அறியத்தருகிறோம். பல்லாயிரம் ஆண்டுகளாக புத்தபெருமான் போதனைகள் எமது நாகரிகங்களுக்கு வழிகாட்டுகின்றன. குஷிநகர் சர்வதேச விமான நிலையத்துக்கான முதல் சேவையில் இலங்கை பௌத்த யாத்திரிகர்களை வரவேற்க இந்தியா ஆவலுடனுள்ளது.
மேம்பட்ட வர்த்தகம் & முதலீடு, உட்கட்டமைப்பு மற்றும் தொடர்பாடல் திட்டங்கள் ஊடாக பொருளாதார நட்புறவை வலுவாக்குவதில் இந்தியாவும் இலங்கையும் அர்ப்பணிப்புடன் உள்ளன. பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போராட எமது பாதுகாப்புசார் உறவை தொடர்வதுடன் அது மேலும் வலுவாக்கப்படும்."

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...