
இந்தியா, டென்மார்க் இடையே அறிவுசார் ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியா மற்றும் டென்மார்க் இடையே அறிவுசார் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் சனிக்கிழமை கையெழுத்தானது.
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மத்திய அமைச்சரவை, அறிவுசார் சொத்து (ஐபி) ஒத்துழைப்புத் துறையில் டென்மார்க்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து டென்மார்க்கின் டேனிஷ் காப்புரிமை மற்றும் வர்த்தக அமைப்புடன் அறிவுசார் ஒத்துழைப்பு துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் சனிக்கிழமை கையெழுத்திட்டது.
கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) செயலாளர் டாக்டர் குருபிரசாத் மோகபத்ரா மற்றும் டென்மார்க்கின் தூதர் ஃப்ரெடி ஸ்வானே ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இரு நாடுகளின் வணிகங்கள், ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களிடையேயான சிறந்த நடைமுறைகள், அனுபவங்கள் மற்றும் அறிவைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் இரு நாடுகளுக்கிடையில் அறிவுசார் ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பயிற்சித் திட்டங்கள், நிபுணர்களின் பரிமாற்றம், தொழில்நுட்ப பரிமாற்றங்கள் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...