தில்லியில் டிராக்டரை எரித்து காங்கிரஸ் போராட்டம்; கடுமையாக சாடும் பாஜக

வேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் இளைஞர் அணியினர், புது தில்லியில் இந்தியா கேட் பகுதியில் டிராக்டர் ஒன்றை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தில்லியில் டிராக்டரை எரித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; சாடும் பாஜக
தில்லியில் டிராக்டரை எரித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; சாடும் பாஜக

புது தில்லி: வேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் இளைஞர் அணியினர், புது தில்லியில் இந்தியா கேட் பகுதியில் டிராக்டர் ஒன்றை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்துக்கு பாஜக தரப்பில் கடும் விமரிசனம் முன் வைக்கப்பட்டுள்ளது. மிகவும் அவமானத்துக்கு உரிய, விவசாயிகளை திசைதிருப்புவதற்காக செய்யப்படும் நாடகம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநில விவசாயிகளும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் அணியைச் சேர்ந்த 15 முதல் 20 பேர், ஒரு டிரக்கில் டிராக்டரை ஏற்றிக் கொண்டு வந்து ராஜபாதையில் அதனை இறக்கி, மன்சிங் சந்திப்பில் தீயிட்டுக் கொளுத்தினர். இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்த வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.  இந்த சம்பவத்தில் அக்கட்சியைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு பாஜக மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ளதோடு, நாட்டை காங்கிரஸ் கட்சி அவமரியாதை செய்துவிட்டது. டிரக்கில், டிராக்டரை கொண்டு வந்து இந்தியா கேட் அருகே எரித்து, விவசாயிகளுக்காகப் போராடுவது போல காங்கிரஸ் செய்யும் நாடகத்துக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். விவசாயிகள் பெயரைச் சொல்லி காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது. விரைவில் அதன் முகமூடி அவிழும் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக பொதுச் செயலாளர் புபேந்தர் யாதவ் இது பற்றி பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் இந்த செயல் விவசாயிகளுக்கு எதிரானது. விவசாயிகள் எப்போதுமே விவசாயக் கருவிகளை வணங்குவார்களே தவிர, அதற்கு தீ வைக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com