வாயிற்காப்பாளனிலிருந்து ஐஐஎம் பேராசிரியராக உயர்ந்த இளைஞரின் வீடு இது

வாயிற்காப்பாளன் பணியாற்றிய இளைஞர் தற்போது ஐஐஎம் உதவிப் பேராசிரியராக உயர்ந்துள்ளார். 28 வயதாகும் ரஞ்சித், சென்னை ஐஐடியில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
வாயிற்காப்பாளனிலிருந்து ஐஐஎம் பேராசிரியராக உயர்ந்த இளைஞரின் வீடு இது
வாயிற்காப்பாளனிலிருந்து ஐஐஎம் பேராசிரியராக உயர்ந்த இளைஞரின் வீடு இது
Published on
Updated on
2 min read

காசர்கோடு: வாயிற்காப்பாளன் பணியாற்றிய இளைஞர் தற்போது ஐஐஎம் உதவிப் பேராசிரியராக உயர்ந்துள்ளார். 28 வயதாகும் ரஞ்சித், சென்னை ஐஐடியில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

தனது கனவை நனவாக்க குடும்பப் பொருளாதாரமோ, சமூகச் சூழலோ தடையில்லை என்று நிரூபித்திருக்கும் ரஞ்சித்தின் கூரை வீட்டின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் கேரள மாநில நிதித்துறை அமைச்சர் டி.எம். தாமஸ் இசாக். தனது அதீத திறமையால் உயர்ந்தவர் என்றும் அவர் ரஞ்சித்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சித்
ரஞ்சித்

பூச்சுவேலை செய்யப்படாத, கதவுகளற்ற நுழைவு வாயில் மற்றும் ஜன்னல்களுடன், இரண்டு சிறிய அறைகள். ஒழுகாமலிருக்கு தார்ப்பாய் வேயப்பட்ட அந்த வீடுதான் ஒரு ஐஐஎம் உதவிப் பேராசிரியர் வாழும் இல்லம் என்பதை அறிந்த சமூகதளவாசிகள், ஆச்சரியப்பட்டுப் போயினர். அதிசயித்தும் போயினர்.

அரசுப் பள்ளியில் படித்து, கேரள அரசுக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்ற ரஞ்சித், சென்னை ஐஐடியில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னை ஐஐடி பேராசிரியர் டாக்டர் சுபாஷ் சசிதரனின் வழிகாட்டுதலால், பல்வேறு தடைகளை உடைத்த ரஞ்சித், இன்று ஐஐஎம் உதவிப் பேராசிரியராக உள்ளார்.

பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்தபோதுதான், அவர் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய போராட்டத்தைச் சந்திந்தார். குடும்ப சூழலில், படிப்பை கைவிட்டுவிட்டு வேலைக்குச் செல்ல முடிவெடுத்தார். அப்போது தான் அவரது கண்ணில் பட்டது பிஎஸ்என்எல் தொலைப்பேசி இணைப்பக அலுவலகத்தில் இரவு நேர வாயிற்காப்பாளன் பணிக்கு ஆள் தேவை என்ற விளம்பரம்.

நல்லவேளையாக அந்த வேலை ரஞ்சித்துக்குக் கிடைத்தது. "அங்கு வாயிற்காப்பாளனாக சுமார் 5 ஆண்டுகள் பணியாற்றினேன்" என்கிறார் ரஞ்சித். ஆரம்ப ஊதியம் ரூ.3,500லிருந்து, ஐந்தாவது ஆண்டில் ரூ.8,000 கிடைத்து. பகலில் கல்லூரியில் படிப்பேன், இரவில் வாயிற்காப்பாளனாக பணியாற்றுவேன் என்று சொல்லும் ரஞ்சித், கல்லூரியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.

"இங்குதான் நான் பிறந்தேன், வளர்ந்தேன். வாழ்ந்தேன். தற்போது மிகவும் மகிழ்ச்சியாக சொல்கிறேன், ஐஐஎம் உதவிப் பேராசிரியரான நான் இங்குதான் பிறந்தேன் என்பதை. நான் எனது வாழ்க்கை அனுபவத்தை இங்கிருந்து தொடங்கி, ஐஐஎம்-ராஞ்சியில் நிறைவு செய்வேன். எனது வாழ்க்கை, யாரேனும் ஒருவரின் கனவை நனவாக்கினாலும் மகிழ்வேன்" என்கிறார் ரஞ்சித் என்ற அந்த இளைஞர் துடிப்புடன்.

இன்று பல இளைஞர்களின் வழிகாட்டியாகவும், முன்னுதாரணமாகவும் மாறியுள்ளார் ரஞ்சித். சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் ரஞ்சித்தின் வெற்றியை கொண்டாடுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com