தில்லி கொடூரம்: பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருடன் துணை நின்ற ராகுல் காந்தி

தில்லியில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருடன் துணை நின்ற ராகுல் காந்தி
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருடன் துணை நின்ற ராகுல் காந்தி
Published on
Updated on
2 min read

தில்லியில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் ஒன்பது வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சிறுமியில் உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராகுல் கூறுகையில், "நான் குடும்பத்தாருடன் பேசினேன். 

அவர்கள் நீதியை தவிர்த்து வேறு எதுவும் கேட்கவில்லை. நீதி வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டும். அதை நாங்கள் செய்வோம். உங்களுடன் துணை நிற்பேன் என அவர்களிடம் தெரிவித்தேன். நீதி கிடைக்கும் வரை ராகுல் காந்தி அவர்களுக்கு துணை நிற்பான்" என்றார்.

சிறுமியை சந்தித்த பிறகு, ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில், "சிறுமியின் பெற்றோரின் கண்ணீர் ஒன்றை தான் உணர்த்துகிறது. அவர்களின் மகளுக்கு நாட்டின் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதியை தேடிய பயணத்தில் நான் அவர்களுடன் இருப்பேன்" என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து தென்கிழக்கு தில்லி காவல் துணை ஆணையர் இங்கித் பிரதாப் சிங் கூறுகையில், "உடற்கூறாய்வு தெளிவான முடிவுகளை அளிக்கவில்லை. எனவே, குற்றம்சாட்டப்பட்ட நால்வர் கண்டறியும் மற்றும் போதை மருந்து சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்" என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, சிறுமி மற்றும் பெண் ஒருவர், தங்கள் வீட்டுக்கு அருகே உள்ள மயானத்தின் கூலரிலிருந்து குடிநீர் எடுப்பதற்காக சென்றனர். பல மணி நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. மாலை 6 மணி அளவில், மயானத்தின் பூசாரியும் அவருக்கு தெரிந்தவர்களும் தாயை அழைத்து சிறுமியின் உடலை காண்பித்துள்ளனர். விபத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்திவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 

தனது மகளின் உடலில் தீக்காயம் இருந்ததாகவும் முழங்கை மற்றும் உதடுகள் நீல நிறத்தில் இருந்ததாகவும் தாய் கூறினார். அதுமட்டுமின்றி, இதுகுறித்து காவல்நிலையத்தில் கூற வேண்டாம் என பூசாரியும் அவரின் கூட்டாளிகளும் தாயிடம் கூறியுள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்தால் உடற்கூராய்வின்போது சிறுமியின் உடல் பாகங்கள் திருடப்பட்டுவிடும் என்றும் உடலை உடனடியாக தகனம் செய்ய வேண்டும் என்றும் தாயிடம் கூறியுள்ளனர். ஆனால், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பூசாரி உள்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com