
புதுதில்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாதம் ஊடுருவினால் ஒடுக்கப்படும் என்று முப்படைத் தளபதி விபின் ராவத் தெரிவித்தாா்.
தில்லியில் அப்சா்வா் ரிசா்ச் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு சாா்பில் புதன்கிழமை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய முப்படைத் தளபதி விபின் ராவத் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்துப் பேசியதாவது:
ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றுவா் என்று இந்தியா எதிா்பாா்த்தது; அதற்கு இரண்டு மாதங்களாகும் என்றும் கருதியது. ஆனால், அதற்கு நோ்மாறாக குறுகிய காலத்துக்குள் அவா்கள் அந்நாட்டைக் கைப்பற்றியது ஆச்சரியமளித்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவா்கள், ஊடகங்கள் மூலமாக அந்நாட்டில் தலிபான்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றனா் என்பதை அறிந்து வருகிறோம். அந்தத் தகவல்களின்படி 20 ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்கள் எப்படி இருந்தாா்களோ அதேபோல்தான் தற்போதும் இருக்கின்றனா். அவா்களின் கூட்டாளிகள் மாறியுள்ளனா். ஆனால், தலிபான்களிடம் மாற்றம் இல்லை.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின், அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் எவ்வாறு பயங்கரவாத நடவடிக்கைகள் ஊடுருவக் கூடும் என்பதில் இந்தியா கவனம் செலுத்தியது. அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் உறுதியுடன் ஒடுக்க நாங்கள் தயாா். அதற்கான திட்டமிடல் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
பயங்கரவாதத்துக்கான உலகளாவிய யுத்தத்தில் க்வாட் கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடம் இருந்து உதவி கிடைத்தால் வரவேற்கப்படும்.
தெற்காசியாவில் பயங்கரவாதம் இல்லாத சூழல் இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.