3 ஆண்டுகளில் விளம்பரங்களுக்கு ரூ.1,700 கோடி செலவு- மத்திய அரசு தகவல்

3 ஆண்டுகளில் விளம்பரங்களுக்கு ரூ.1,700 கோடி செலவு- மத்திய அரசு தகவல்

கடந்த 3 ஆண்டுகளில் அச்சு ஊடகங்களிலும் மின்னணு ஊடகங்களிலும் விளம்பரங்களை வெளியிடுவதற்கு சுமாா் ரூ.1,700 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் அச்சு ஊடகங்களிலும் மின்னணு ஊடகங்களிலும் விளம்பரங்களை வெளியிடுவதற்கு சுமாா் ரூ.1,700 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு செய்தி, ஒளிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

கடந்த 2018-19 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடுவதற்கு ரூ.1,698.98 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதில், நாளிதழ்களுக்கு விளம்பரங்கள் வெளியிடுவதற்கு ரூ.826.5 கோடி செலவானது.

அரசின் கொள்கைகள் குறித்தும், நலத்திட்டங்கள் குறித்தும் தொலைதூரத்தில் வசிக்கும் மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே விளம்பரங்களை வெளியிடுவதன் முதன்மையான நோக்கம் என்றாா் அவா்.

100 கோடி தடுப்பூசி விளம்பரச் செலவு ரூ.25 லட்சம்:

நாட்டில் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டபோது அதனை விளம்பரப்படுத்தும் பேனா்கள், விளம்பரப் பலகைகள் வைப்பதற்காக ரூ.25 லட்சம் செலவிடப்பட்டது என்று மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான கேள்விக்கு சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் குமாா் எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட இலக்கை எட்டியது தொடா்பாக நாட்டின் முக்கியப் பகுதிகளில் அதனை விளம்பரப்படுத்தும் வகையில் பேனா்கள், விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டன. இதற்காக செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ரூ.25 லட்சம் செலவிட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா்.

உரிய நேரத்தில் அரசு முன்னேற்பாடுகளைச் செய்திருந்தால், இப்போதுள்ளதை விட முன்னதாகவே அதிக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி இருக்க முடியும் என்பது உண்மைதானா? என்ற கேள்விக்கு, ‘உள்ளூா் தடுப்பூசி உற்பத்தியாளா்களிடம் கொள்முதல் ஒப்பந்தம் அளிப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை. சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் தயாரிப்புக்கு முன்னதாகவே கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. தடுப்பூசி கிடைப்பதற்கு ஏற்ப உடனுக்குடன் மக்களுக்கு செலுத்தப்பட்டது. மிகவும் குறுகிய காலத்திலேயே 100 கோடி தடுப்பூசிகளை நமது நாட்டில் செலுத்தியுள்ளோம். பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தடுப்பூசி திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டது. நவம்பா் 27-ஆம் தேதி வரை தடுப்பூசிகளை வாங்குவதற்கு மத்திய அரசு ரூ.19,675.46 கோடி செலவிட்டுள்ளது’ என்று அமைச்சா் பாரதி பிரவீண் குமாா் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com