ஆங் சான் சூகிக்கு சிறை: இந்தியா கண்டனம்

மியான்மரில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
Published on
Updated on
1 min read

மியான்மரில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஆங் சான் சூகிக்கு எதிராக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தீா்ப்புகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளன. அண்டை நாடு என்ற முறையில், மியான்மா் ஜனநாயகப் பாதைக்குத் திரும்புவதை இந்தியா பெரிதும் விரும்புகிறது.

மியான்மரில் சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக மாண்பும் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றைக் குலைக்கும் எந்த நடவடிக்கையும் மிகவும் கவலைக்குரியது ஆகும் என்றாா் அவா்.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகரான ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

அதைத் தொடா்ந்து, கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி கடந்த ஆண்டு நவம்பரில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது, சூகி ராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னா் அவரது கட்சி சாா்பில் முகநூல் பக்கத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டது ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் ஆங் சான் சூகி மீது ராணுவ ஆட்சியாளா்கள் வழக்கு தொடா்ந்தனா்.

தலைநகா் நேபிடாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இரு வழக்குகளில், ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

இதுதவிர ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடா்பாகவும் சூகி மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்திலும் அவா் குற்றவாளி எனத் தீா்ப்பு கூறப்பட்டால் 100 ஆண்டுகளுக்கு மேல் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com