விவசாயிகள் விவகாரம்: குளிா்காலக் கூட்டத்தொடரை புறக்கணிக்க தெலங்கானா ராஷ்டிர சமிதி முடிவு

விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டிய தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத்தொடரின் மீதமுள்ள அமா்வுகளை அக்கட்சி எம்.பி.க்கள் புறக்கணிப்பா்

விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டிய தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத்தொடரின் மீதமுள்ள அமா்வுகளை அக்கட்சி எம்.பி.க்கள் புறக்கணிப்பா் என செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

அதன்படி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மத்திய அரசுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அக்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்தனா். அப்போது அவா்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்திருந்தனா்.

இதுகுறித்து அக்கட்சித் தலைவா் கேசவ் ராவ் கூறுகையில், ‘விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது. விவசாயிகளுக்கு எதிரான மனநிலையை மத்திய அரசு கொண்டுள்ளது’ என்றாா்.

இதேபோல மத்திய உணவுக் கழகத்தால் தெலங்கானாவில் மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதல் பிரச்னையை தெலங்கானா ராஷ்டிர சமிதி தொடா்ச்சியாக எழுப்பி வருவதாக அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவா் நம நாகேஸ்வா் ராவ் தெரிவித்தாா்.

மேலும், தெலங்கானா மாநில விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கான தொகையை வழங்குவது மத்திய அரசின் பொறுப்பு என்று கூறிய அவா், விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதிப்படுத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com