விபின் ராவத் மறைவு: தலைவர்கள் இரங்கல்

முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் மறைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
விபின் ராவத்  (கோப்புப் படம்)
விபின் ராவத் (கோப்புப் படம்)


முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் மறைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவையிலிருந்து சூலூர் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விங் கமாண்டர் வருண் தீக்காயங்களுடன் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

இந்நிலையில் விபின் ராவத் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் அகால மரணம் குறித்து நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். தேசம் தனது துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. தாய்நாட்டிற்கான அவரது நான்கு தசாப்தகால தன்னலமற்ற சேவை, விதிவிலக்கான வீரம் என்றும் குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்' என்று பதிவிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி

ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் விபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களை இழந்ததில் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அவர்கள் மிகுந்த சிரத்தையுடன் நாட்டிற்கு சேவை செய்தனர். 

ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறந்த ராணுவ வீரர். ஒரு உண்மையான தேசபக்தரான அவர், ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு இயந்திரங்களை நவீனமயமாக்குவதில் பெரிதும் பங்களித்தார். முக்கிய விஷயங்களில் அவரது நுண்ணறிவு மற்றும் முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை. அவரது மறைவு என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

காங். எம்.பி. ராகுல் காந்தி இரங்கல்

முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எதிர்பாராத மிகமோசமான துயரம்.

இந்த விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த கடினமான சூழ்நிலையில், இந்தியா ஒன்றுபட்டு நிற்கும் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு

விபின் ராவத் மற்றும் அவரது மனைவி விபத்தில் பலியான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா 

தீரமான போர் வீரரான முப்படை தலைமை தளபதி விபின்ராவத்தை நாம் இழந்துவிட்டோம் . விபின் ராவத்தின் அர்ப்பணிப்பையும், பங்களிப்பையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த கடினமான சூழலை தாங்கும் மனவலிமை எல்லோருக்கும் கிடைக்கட்டும் என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் மறைவு நாட்டுக்கும், ராணுவத்திற்கும் பேரிழப்பு என்று  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com