
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் பலியானதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள், அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியிருப்பதால், மரபணு பரிசோதனை நடத்தி உடல்கள் அடையாளம் காணும் பணிகள் நடைபெறும் என்றும் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாக தகவல்கள் வெளியாகின.
விபத்து நடந்த இடத்திலிருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான், ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேரும் பலியாகிவிட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, கோவையிலிருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றுதான் குன்னூர் அருகே புதன்கிழமை விபத்தில் சிக்கியது.
நஞ்சப்ப சத்திரம் அருகே சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதிக்கு மிக அருகே ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில், மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ராணுவத்தினரும், காவல்துறையினரும் ஈடுபட்டனர். இறுதியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த 14 பேரில், 10 பேர் சடலமாகவே மீட்கப்பட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் 3 பேர் பலியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பகல் 12.20 மணிக்கு: இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.
பகல். 1.43 மணிக்கு: முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயரதிகாரிகள் பயணித்த எம்.ஐ. வகை ராணுவ ஹெலிகாப்டர், தமிழகத்தில் கோவை - சூலூர் அருகே விபத்துக்குள்ளானதாகவும், விபத்து நடந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.