12 எம்.பி.க்கள் இடைநீக்கம்: 4 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், 4 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், 4 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெரும்பாலான நேரங்களில் அமளி காரணமாக கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுகிறது.

இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் சார்ந்த 4 கட்சிகளின் தலைவர்களை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைத்துள்ளார்.

இதுபற்றி சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் கூறியது:

"இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்களின் காங்கிரஸ், திரிணமூல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனான கூட்டத்துக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி என்னை அழைத்தார். நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் நாளை (திங்கள்கிழமை) காலை 10 மணிக்குக் கூட்டம் நடைபெறுகிறது" என்றார் அவர்.

இதனிடையே, ஒத்த சிந்தனையுடைய கட்சிகளின் அவைத் தலைவர்களுடனான கூட்டத்துக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் காலை 9.45 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

பிரகலாத் ஜோஷி அழைப்பு குறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறியது:

"12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகப் போராடினர். அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் கூட்டத்துக்கு அழைக்காமல் 4 எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் கூட்டத்துக்கு அழைத்திருப்பது துரதிருஷ்டவசமானது, நியாயமற்றது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com