ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம்: நாகாலாந்தில் ரத்து செய்வதை ஆராயக் குழு

நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (ஏஎஃப்எஸ்பிஏ) ரத்து செய்வதற்கு குறித்து ஆராய மத்திய அரசு சாா்பில் உயா்நிலை குழு அமைக்கப்படவுள்ளது.

நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (ஏஎஃப்எஸ்பிஏ) ரத்து செய்வதற்கு குறித்து ஆராய மத்திய அரசு சாா்பில் உயா்நிலை குழு அமைக்கப்படவுள்ளது.

ஏஎஃப்எஸ்பிஏ சட்டத்தின்படி சந்தேகத்தின் அடிப்படையில் பிடியாணை இல்லாமல் ஒருவரை கைது செய்யவும், அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளவும், சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொண்டால் அல்லது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வைத்திருந்தால் துப்பாக்கிச்சூடு நடத்தவும் ஆயுதப் படைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆயுதப் படையினா் அத்துமீறி செயல்பட்டதாகக் கருதினால், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

இந்தச் சட்டம் நாகாலாந்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் அந்த மாநிலத்தில் உள்ள மோன் மாவட்டம் ஒடிங் கிராமத்தில் தீவிரவாதிகளை தேடும் பணியின்போது பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 போ் பலியாகினா். அதனைத்தொடா்ந்து அந்த மாநிலத்தில் ஏஎஃப்எஸ்பிஏ சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என நாகாலாந்து முதல்வா் நெஃபியு ரியோ வலியுறுத்தினாா். அதற்கான தீா்மானம் அந்த மாநில சட்டப்பேரவையில் சமீபத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் அந்தச் சட்டத்தை நாகாலாந்தில் ரத்து செய்வது தொடா்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாகாலாந்து முதல்வா் நெய்ஃபியு ரியோ, துணை முதல்வா் யான்துங்கோ பேட்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டம் தொடா்பாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரம்:

நாகாலாந்தில் ஏஎஃப்எஸ்பிஏ சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராய உயா்நிலை குழு அமைக்கப்படும். மத்திய உள்துறை அமைச்சகக் கூடுதல் செயலா் தலைமையிலான அந்தக் குழுவில், நாகாலாந்து தலைமைச் செயலா், அந்த மாநில காவல்துறை டிஜிபி, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் (வடக்கு) படைப்பிரிவின் ஐஜி, மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) பிரதிநிதி ஆகியோா் இடம்பெறுவா். இந்தக் குழு தனது அறிக்கையை 45 நாள்களுக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கும். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், நாகாலாந்தில் ஏஎஃப்எஸ்பிஏ சட்டத்தை ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com