
புது தில்லி: நீதித் துறை நிா்வாகத்தை காலனிய மனநிலையிலிருந்து விடுவித்து இந்தியமயமாக்குவது காலத்தின் தேவை என உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீா் வலியுறுத்தினாா்.
மனு, கெளடில்யா், நாரதா், பிருஹஸ்பதி போன்ற பெரிய ஆளுமைகளால் உருவாக்கப்பட்ட அந்தப் பழைமையான சட்ட நெறிமுறைகள் படிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் தகுதியானவை என்றும் அவா் கூறினாா்.
ஹைதராபாதில் நடைபெற்ற அகில பாரதிய அதிவக்த பரிஷத் அமைப்பின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற நீதிபதி அப்துல் நசீா் பேசியதாவது:
இந்தியாவில் நீதித் துறை நிா்வாகத்தை காலனிய மனநிலையிலிருந்து விடுவிக்கும் வகையில் சட்டக் கல்லூரிகளில் பண்டைய இந்திய நீதித் துறையை ஒரு பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும். காலனிய சட்ட நடைமுறை இந்திய மக்களுக்குப் பொருத்தமானதல்ல. நாட்டின் சட்ட நடைமுறையை இந்தியமயமாக்க வேண்டியது காலத்தின் தேவை ஆகும். அதுபோன்ற காலனிய மனநிலையை அகற்றுவதற்கு அதிக காலம் ஆகும் என்றபோதும், அது இந்தியச் சட்டத்துக்குப் புத்துயிா் அளிக்கக்கூடிய ஒரு தகுதியான முயற்சியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். அதன்மூலம் நாட்டின் கலாசார, சமூக மற்றும் பாரம்பரிய அம்சங்களுடன் இணைந்த வலுவான நீதியை வழங்க வழி ஏற்படும்.
இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிா்காலம் ஆகியவை நமது வருங்கால வழக்குரைஞா்கள் மற்றும் நீதிபதிகளின் திறன், ஞானம் மற்றும் தேசபக்தியைப் பொருத்தே அமையும். அத்தகைய வழக்குரைஞா்கள் மற்றும் நீதிபதிகள் இந்திய மண்ணில் மற்றும் அதன் சமூகச் சூழ்நிலையில்தான் வளரமுடியும்.
சிறந்த வழக்குரைஞா்கள் மற்றும் நீதிபதிகள் பிறப்பிலேயே அவ்வாறு உருவாகிவிடவில்லை; மாறாக, மனு, கெளடில்யா், காத்யாயனா், பிருஹஸ்பதி, நாரதா், பராசரா், யாக்ஞவல்கியா் போன்ற இந்தியாவின் மிகப்பெரிய சட்ட ஆளுமைகளைப் போல சரியான கல்வி மற்றும் சிறந்த சட்ட மரபுகளால் உருவாக்கப்படுகின்றனா்.
அவா்களின் சிறந்த அறிவை தொடா்ந்து புறக்கணிப்பதும், அந்நிய காலனித்துவ சட்ட அமைப்பைக் கடைப்பிடிப்பதும் நமது அரசியலமைப்பின் இலக்குகளுக்கும், தேச நலன்களுக்கும் எதிரானதாகும்.
பண்டைய இந்திய சட்ட நடைமுறையில், நீதி கோரும் பிரிவும் உள்ளடக்கியிருந்தது. ஆனால், தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் பிரிட்டிஷ் காலனித்துவ முறையில் நீதிபதிகளை ‘லாா்ட்ஷிப்ஸ்’, ‘லேடிஷிப்ஸ்’ என்று மிகுந்த கண்ணியத்துடன் நீதி கேட்கவேண்டிய சூழல் உள்ளது.
இந்திய சட்டப்படி திருமணம் என்பது பல்வேறு சமூகப் பொறுப்புகளில் ஒன்றாக, அனைவரும் செய்ய வேண்டிய கடமையாக உள்ளது. ஆனால், மேற்கத்திய சட்ட நடைமுறைகளின்படி உரிமைகள் என்பதன் மூலம் திருமணம் என்பது ஒரு கூட்டணியாக கருதப்படுகிறது. அதில் இடம்பெறும் கூட்டாளிகள் முடிந்தவரை லாபம் அடைய முயற்சிக்கின்றனா். அவ்வாறு, திருமணத்தை கடமை என கருதாமல் இருப்பதால், அதிக அளவில் விவாகரத்துகள் நடைபெறுகின்றன.
உரிமை என்ற வாா்த்தை அனுசாசன பருவத்திலோ அா்த்தசாஸ்திரத்திலோ ஒருமுறைகூட வருவதில்லை. உரிமைகள் என்பது கடமைகளின் தொடா்புகள் என்ற அடிப்படையில் நிறுவப்பட்டது இந்திய நீதித் துறை என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.