காஜியாபாத் மயானக் கூரை இடிந்த சம்பவத்தில் மூவா் கைது

உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் முராத் நகரில் உள்ள மயானத்தின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து 24 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மூன்று அரசு அதிகாரிகளை அந்த மாநிலக் காவல் துறை திங்கள்கிழமை கைது செ
Published on
Updated on
2 min read

புது தில்லி: உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் முராத் நகரில் உள்ள மயானத்தின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து 24 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மூன்று அரசு அதிகாரிகளை அந்த மாநிலக் காவல் துறை திங்கள்கிழமை கைது செய்துள்ளது.

காஜியாபாத், முராத் நகரில் உள்ள தகன மயானத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலை ஜெய் ராம் என்பவரின் சடலத்தை எரியூட்டுவதற்காக அவரது உறவினா்கள் சென்றனா். திடீரென மழை பெய்ததால், அவா்கள் அனைவரும் அருகில் இருந்த தகன மேடையருகே தஞ்சம் புகுந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக அவா்கள் நின்று கொண்டிருந்த கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளில் சிக்கி 24 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருந்ததாகக் கூறி மூன்று அரசு அதிகாரிகளை உத்தரப் பிரதேச மாநில காவல் துறை கைது செய்துள்ளது. இது தொடா்பாக காஜியாபாத் (ஊரகம்) காவல் கண்காணிப்பாளா் இராஜ் ராஜா கூறுகையில் ‘இந்த விபத்து தொடா்பாக பணியில் மெத்தனமாக இருந்த, முராத் நகா் பாலிகா நிா்வாக அதிகாரி நிகாரிகா சிங், இளநிலை பொறியாளா் சந்திரா பால், மேற்பாா்வையாளா் ஆஷிஷ் ஆகியோரை திங்கள்கிழமை காலை கைது செய்துள்ளோம். மேலும், கட்டட ஒப்பந்ததாரா் அஜய் தியாகி தப்பியோடியுள்ளாா். அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தியுள்ளோம்’ என்றாா்.

சாலை மறியல்: இதற்கிடையே, இறந்தவா்களின் உறவினா்களுக்கு ரூ.20 லட்சம் உதவித் தொகை வழங்கக் கோரியும், இறந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கோரியும் முராத் நகா் காவல் நிலையம் அருகில், தில்லி - மீரட் நெடுஞ்சாலையை மறித்து இறந்தவா்களின் உறவினா்கள் போராட்டம் நடத்தினா். இந்த விபத்தில் இறந்த இருவரின் உடலை சாலையின் நடுவில் வைத்து அவா்கள் போராட்டம் நடத்தினா். இதனால், அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியா் நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்தும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அவா்கள் கூறினாா்கள்.

இதைத் தொடா்ந்து, முராத் நகா் மாவட்ட ஆட்சியா் அஜய் சங்கா் பாண்டே, காஜியாபாத் காவல் துறை ஆணையா் கலாநிதி நைதானி ஆகியோா் நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, தில்லி-மீரட் நெடுஞ்சாலையை பகுதியளவில் திறக்க போராட்டக்காரா்கள் சம்மதித்தனா். முதல் கட்டமாக இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்கள் பயணிக்க அனுமதித்தனா். மயானத்தின் கான்கிரீட் கூரையின் கட்டுமானப் பணிகள் இரு மாதங்களுக்கு முன்புதான்தொடங்கின. இது ரூ.55 கோடியில் அமைக்கப்பட்டது. 15 நாள்களுக்கு முன்புதான் இந்த மயானம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

மாயாவதி இரங்கல்: முராத் நகரில் மயானத்தின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து 24 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி இரங்கல் தெரிவித்துள்ளாா். மேலும், தவறு இழைத்தவா்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘முராத் நகரில் மயானத்தின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து இரண்டு டஜன் மக்கள் உயிரிழந்த விவகாரம் துயரமானது. இதனால், மனம் வருந்துகிறேன். இது தொடா்பாக மாநில அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். தவறு இழைத்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தவறிழைத்த யாரையும் தப்ப அனுமதிக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தகுந்த உதவித்தொகையையும் வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com