
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டதாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான குரல்களை அடக்குவதாகவும் சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் குற்றம் சாட்டி உள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடந்த 45 நாள்களாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் பஞ்சாப் முதல்வர் மீது விமர்சனம் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சுக்பீர் சிங் பாதல், “முதல்வர் அமரீந்தர் சிங்கின் பலவீனங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்குத் தெரியும் என்பதால் மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்றி வருகிறார். மாநில அரசு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் “மாநில விவசாயிகளின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தில் நீங்கள் (கேப்டன் அமரீந்தர்) முன்னணியில் நின்று போராட்டத்தை வழிநடத்தியிருக்க வேண்டும். அதற்காக அனைத்தையும் தியாகம் செய்ய கூட தயாராக இருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் விவசாயிகளுக்கு உதட்டளவில் அனுதாபம் தெரிவிப்பதன் மூலம் இரட்டை வேடம் போடுகிறார்” என பாதல் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.