
காந்தியைக் கொன்ற கோட்சேவின் பெயரில் மத்தியப்பிரதேசத்தில் நூலகத்தைத் திறந்த ஹிந்து மகாசபாவின் துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம் குவாலியரில் இந்துமகாசபாவின் தேசியத் துணைத்தலைவர் ஜெய்வர் பரத்வாஜ் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே பெயரில் நூலகம் ஒன்றைத் திறந்துவைத்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
“இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை குறித்தும், தேசியத் தலைவர்கள் மற்றும் பிரிவினைக்கு எதிரான கோட்சேவின் பதிலடி குறித்தும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள இந்த நூலகம் பயன்படும்” என ஹிந்து மகாசபாவின் தேசியத் துணைத் தலைவர் ஜெய்வர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
இவரின் செயலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் இதில் ஈடுபட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மத்தியப்பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.