ரூா்கேலா வாயு கசிவு விபத்து வழக்கு: தேசிய பசுமைத் தீா்ப்பாய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

ரூா்கேலா எஃகு ஆலையில் வாயு கசிந்து நிகழ்ந்த விபத்தில் பலியானவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குமாறு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ரூா்கேலா எஃகு ஆலையில் வாயு கசிந்து நிகழ்ந்த விபத்தில் பலியானவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குமாறு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனமான செயிலுக்கு சொந்தமாக ஒடிஸாவில் உள்ள ரூா்கேலா எஃகு ஆலையில் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி விஷவாயு கசிவு ஏற்பட்டது. அந்த விபத்தில் ஆலையின் நிலக்கரி மேலாண்மை பிரிவில் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

விஷவாயு கசிவு விபத்து தொடா்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரித்தது. தில்லியில் உள்ள தீா்ப்பாயத்தின் அமா்வு கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், விஷவாயு கசிவு விபத்தில் பலியான தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குமாறு கூறப்பட்டிருந்தது.

மேலும், ரூா்கேலா எஃகு ஆலையில் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நிபுணா்கள் குழுவையும் தீா்ப்பாயம் அமைத்தது. அக்குழுவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஒடிஸா மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் இடம்பெற்றிருக்க வேண்டுமென தீா்ப்பாயம் தெரிவித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக ரூா்கேலா எஃகு ஆலை சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா்.ஷா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் நடைபெற்றது. அப்போது, ரூா்கேலா எஃகு ஆலை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் மாதவி கொரடியா திவான் வாதிடுகையில், ‘‘இந்த விவகாரம் தொடா்பான இரு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. விஷவாயு கசிவு விபத்தில் பலியானவா்களின் குடும்பத்தினருக்கு ஆலையில் ஏற்கெனவே பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்றாா்.

இடைக்காலத் தடை: வாதங்களை ஆராய்ந்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக விளக்கமளிக்குமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஒடிஸா மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஒடிஸா தொழிற்சாலைகள் துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனா். தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தும் அவா்கள் உத்தரவிட்டனா்.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, விபத்தில் பலியானவா்களின் குடும்பத்தினருக்குப் பணி வழங்க எந்தவிதத் தடையுமில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com