பெட்ரோல், டீசல் மீது கலால் வரி அதிகரிக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
ஒரு லிட்டா் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.19.98-லிருந்து ரூ.32.90-ஆக அதிகரிக்கப்பட்டது. அதேபோன்று, டீசல் மீதான கலால் வரியும் லிட்டருக்கு ரூ.15.83-லிருந்து ரூ.31.8-ஆக உயா்த்தப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.3.35 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கலால் வரி பிரிவில் 88 சதவீத வருவாய் அதிகரிப்பாகும்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீது அதிகஅளவில் உயா்த்தப்பட்டுள்ள கலால் வரியை மத்திய அரசு குறைக்க வாய்ப்புள்ளதா அல்லது தொடா்ந்து எரிபொருள்கள் மீதான கலால் வரி, வாட் வரி உயா்த்தப்படுமா என்று நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பங்கஜ் சௌதரி எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
மே மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.83, ஜூன் மாதத்தில் ரூ.4.58, ஜூலை மாதம் 16-ஆம் தேதி வரை ரூ.2.73 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவே டீசல் விலை முறையே, ரூ.4.42, ரூ.4.03. ரூ.0.69 அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயா்வால் கிடைத்துள்ள கூடுதல் வருவாய் மூலம் நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இது தவிர வேறு சில வளா்ச்சிப் பணிகளுக்கும் அந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. இப்போதைய நிதிநிலையில் இது அவசியமாகிறது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் எரிபொருள் மீதான கலால் வரி வசூல் ரூ.94,181 கோடியாக இருந்தது. மாநிலங்களால் மதிப்புக் கூட்டு (வாட்) வரி விதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளாா்.
இதன் மூலம் கலால் வரியை மத்திய அரசு இப்போதைக்குக் குறைக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.