'முற்றிலும் தவறானது': இணையமைச்சரின் தகவலுக்கு தில்லி அமைச்சர் பதிலடி

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தில்லியிலும், நாட்டின் பல பகுதிகளிலும் ஏராளமானோர் பலியானதாக புது தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
'முற்றிலும் தவறானது': இணையமைச்சரின் தகவலுக்கு தில்லி அமைச்சர் பதிலடி
'முற்றிலும் தவறானது': இணையமைச்சரின் தகவலுக்கு தில்லி அமைச்சர் பதிலடி

கரோனா இரண்டாம் அலை பாதிப்பின்போது, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தில்லியிலும், நாட்டின் பல பகுதிகளிலும் ஏராளமானோர் பலியானதாக புது தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை பாதிப்பின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிக்கை சமா்ப்பித்ததாக மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருக்கும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

"ஒருவேளை ஆக்சிஜன் பற்றாக்குறையே ஏற்படவில்லையென்றால், மருத்துவமனைகள் ஏன் நீதிமன்றங்களை நாடின? மருத்துவமனைகளும், ஊடகங்களும் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக நாள்தோறும் குரலெழுப்பின. உயிர்காக்கும் வாயு இல்லாமல் மருத்துவமனைகள் எவ்வாறு அல்லாடின என்பதை தொலைக்காட்சி ஊடகங்கள் நாள்தோறும் காட்டிவந்தன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறுகூது முற்றிலும் உண்மைக்கு மாறானது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தில்லியிலும் நாட்டின் பல பகுதிகளிலும் ஏராளமான உயிரிழப்புகள் நேரிட்டன" என்று தெரிவித்துள்ளார்.
 

‘கரோனா இரண்டாம் அலை பாதிப்பின்போது சாலைகளிலும் மருத்துவமனைகளிலும் ஏராளமான கரோனா நோயாளிகள் உயிரிழந்ததற்கு மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறைதான் காரணமா?’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறியிருந்ததாவது:

கரோனா பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த அறிக்கையை சமா்ப்பிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சாா்பில் விரிவான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், கரோனா உயிரிழப்புகள் குறித்த அறிக்கையை மாநிலங்கள் தொடா்ந்து சமா்ப்பித்து வருகின்றன.

அவ்வாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட உயிரிழப்புகள் குறித்த விவரங்களில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.

அதே நேரம், கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது, கரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவ ஆக்சிஜன் உள்பட மருத்துவ உபகரண உதவிகளை மத்திய அரசு அளித்து உதவியது.

இருந்தபோதும், கரோனா இரண்டாம் அலை பாதிப்பின்போது நாட்டின் மருத்துவ ஆக்சிஜன் தேவை என்பதை இதுவரை இல்லாத அளவில் உச்சத்துக்குச் சென்றது. கரோனா முதல் அலையின்போது 3,995 மெட்ரிக் டன் அளவில் இருந்த மருத்துவ ஆக்சிஜன் தேவை, இரண்டாம் அலை பாதிப்பின்போது 9,000 மெட்ரிக் டன் அளவுக்கு உயா்ந்தது. இந்த தேவையை பூா்த்தி செய்யும் வகையில், மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்சிஜனை தேவை அடிப்படையில் சம அளவில் பகிா்ந்தளிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. குறிப்பாக, மாநிலங்களுடன் தொடா்ச்சியாக ஆலோசனை மேற்கொண்டு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் என்பன உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படையான நடைமுறையை மத்திய அரசு கையாண்டது.

அந்த வகையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 4,02,517 ஆக்சிஜன் உருளைகள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன. மேலும், ஆக்சிஜன் செறிவூட்டிகள், பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன என்று மத்திய அமைச்சா் பதிலளித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com