நீதித்துறைதான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்: பெகாசஸ் குறித்து மம்தா

பெகாசஸ் விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், ஜனநாயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெகாசஸ் விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், ஜனநாயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினமான இன்று நாடு முழுவதும் உள்ள மேற்கு வங்க மக்களிடம் காணொலி மூலம் மம்தா பானர்ஜி இன்று பிற்பகல் பேசினார்.

அப்போது பெகாசஸ் ஸ்பைவேர் குறித்து விமர்சித்த அவர்,

ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம்தான் ஜனநாயகத்தை உருவாக்க முடியும். இவை மூன்றையும் பெகாசஸ் கைப்பற்றியுள்ளது. பெகாசஸ் மென்பொருள் மிகவும் ஆபத்தானது. இந்த விவகாரத்தால் சரத் பவார், தில்லி முதலமைச்சர், கோவா முதலமைச்சர் ஆகியோரிடம் என்னால் பேச முடியாது. கண்ணுக்கு தெரியாத பொருளை என் செல்லிடப்பேசியில் பொருத்தியுள்ளார்கள்.

உளவு பார்ப்பதற்கு பணம் செலவிடும் மத்திய அரசு மக்களுக்காக செலவு செய்வதில்லை. மத்திய அரசை அடக்கி வைக்கவில்லையெனில், நாடு அழிந்துவிடும். கூட்டாச்சி கட்டமைப்பை பாஜக தரைமட்டமாக்கியுள்ளது.

ஜனநாயகத்தையும் நாட்டையும் உச்ச நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும். அனைவரின் செல்லிடப்பேசியும் வேவு பார்க்கப்பட்டுள்ளதால் நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரணைக்கு எடுத்து கொள்ளக் கூடாதா? இதுகுறித்து விசாரணை செய்ய ஆணையம் அமைக்க வேண்டும்" என்றார்.

மேலும், ஜூலை 27 அல்லது 28ஆம் தேதிகளில், தில்லிக்கு செல்லவுள்ளேன். எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தால் அதில் கலந்து கொள்வேன் எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் பத்திரிகையாளர்கள் தொடங்கி பிரான்ஸ் அதிபர் இம்ரான் மேக்ரான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தென்னாப்பிரிக்கா அதிபர் சைரில் ராமஃபோசா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் எண்கள் வேவு பார்கப்படுவதற்காக இலக்கு வைக்கப்பட்டதாக தி வயர் நிறுவனம் அதிர்ச்சி செய்தியை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

பெகாசஸ் மென்பொருளை தயாரித்த இஸ்ரேன் நாட்டை சேர்ந்த என்எஸ்ஒ நிறுவனம், 36 அரசுகளுக்கு பணி செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com