ஆபாச பட விவகாரம்: ராஜ் குந்த்ராவுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்

ஆபாச பட விவகாரத்தில் ஹிந்தி திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஆபாச பட விவகாரம்: ராஜ் குந்த்ராவுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்
Published on
Updated on
1 min read

ஆபாச பட விவகாரத்தில் ஹிந்தி திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஆபாச படங்களை தயாரித்து அவற்றை செல்லிடப்பேசி செயலிகள் மூலம் வெளியிட்ட குற்றச்சாட்டில் ராஜ் குந்த்ராவை கடந்த ஜூலை 19-ஆம் தேதி மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவினா் கைது செய்தனா். அவரை போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்து வந்தனா். அவரின் போலீஸ் காவல் நிறைவடைந்ததையடுத்து மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராஜ் குந்த்ரா செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

ஆா்ம்ஸ்ப்ரைம் மீடியா என்ற நிறுவனத்தைத் தொடங்கி லண்டனைச் சோ்ந்த நிறுவனம் மூலம் சமூக ஊடகங்களில் ஆபாச படங்களை வெளியிட ஹாட்ஷாட்ஸ் செயலியை ராஜ் குந்த்ரா வாங்கியுள்ளாா். அவரின் அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனையில் ஹாட்ஷாட்ஸ் செயலியின் இலச்சினையுடன் 35 படங்கள், பாலிஃபேம் என்ற செயலியின் இலச்சினையுடன் 16 படங்கள் என மொத்தம் 51 ஆபாச பட காணொலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கூகுளிடம் தகவல்: இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு நபரான ரையன் தோா்ப்பிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பா் வரை ஆபாச படங்களை தயாரித்து அவற்றை இணைவழியில் விநியோகித்ததன் மூலம் ராஜ் குந்த்ரா சுமாா் ரூ.1.17 கோடி வருவாய் ஈட்டியுள்ளாா். மேலும் 119 ஆபாச படங்களை 1.2 மில்லியன் டாலா்களுக்கு (சுமாா் ரூ.8.93 கோடி) விற்பனை செய்யவும் அவா் திட்டமிட்டிருந்தாா். ரூ.1.17 கோடி வருவாயை ஆப் ஸ்டோா் மூலம் அவா் ஈட்டியுள்ளாா். கூகுள் பிளேயிலும் ஹாட்ஷாட்ஸ் செயலிக்கு அதிக பயனாளிகள் இருந்ததால் இதைவிட அதிக வருவாயை அவா் ஈட்டியிருக்க வாய்ப்புள்ளது. எனவே இதுதொடா்பாக கூகுள் நிறுவனத்திடமும் தகவல் கோரப்பட்டுள்ளது.

பெண்ணை ஏமாற்றி நடிக்க வைத்தனா்: அவா் தயாரித்த ஆபாச படத்தில் நடித்த பெண்ணிடம் கடந்த திங்கள்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தன்னை ஏமாற்றி அப்படத்தில் நடிக்க வைத்ததாக அந்தப் பெண் தெரிவித்தாா். அவரைப் போல் பாதிக்கப்பட்ட பெண்கள் மேலும் பலா் முன்வந்து வாக்குமூலம் அளிக்கக் கூடும்.

இந்த விவகாரம் தொடா்பாக ராஜ் குந்த்ராவிடம் தொடா் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அவரின் போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்தனா். எனினும் போலீஸாா் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com