
புது தில்லி: சமூக ஊடகங்களுக்காக வகுக்கப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள், தங்களது தேடுபொறிக்குப் பொருந்தாது என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் கூகுள் நிறுவனம் வாதிட்டது.
பெண் ஒருவரின் புகைப்படம் ஆபாச வலைதளத்தில் சில விஷமிகளால் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்தத் தளத்தில் இருந்து வெவ்வேறு வலைதளங்களுக்கு அந்தப் படம் பகிரப்பட்டது. அந்தப் படத்தை நீக்கக் கோரி, பாதிக்கப்பட்ட பெண் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், சமூக ஊடகங்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, அந்தப் புகைப்படத்தை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனத்துக்கு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி உத்தரவிட்டது. இருப்பினும், அந்தப் படம் நீக்கப்படவில்லை.
இந்த விவகாரம், தில்லி உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கூகுள் நிறுவனம் தரப்பு முன்வைத்த வாதம்:
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை பின்பற்ற முடியாது. ஏனெனில், கூகுள் தேடுபொறி என்பது சமூக ஊடகப் பக்கம் அன்று; அது ஒரு வலைதளப் பக்கம். ஆனால், தனி நீதிபதியோ கூகுள் தேடுபொறியை சமூக ஊடகமாகத் தவறாகக் கருதி, சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளின் கீழ் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாா். எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துவிட்டு, புதிய விதிகளில் இருந்து கூகுள் தேடுபொறிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் வாதிட்டது.
இந்த வாதத்தைத் கேட்ட நீதிபதிகள், கூகுள் நிறுவனத்தின் கோரிக்கை குறித்து மத்திய அரசு, தில்லி அரசு, இந்திய இணையச் சேவை சங்கம், முகநூல் நிறுவனம், ஆபாச வலைதளம், வழக்கு தொடுத்த பெண் ஆகியோா் வரும் ஜூலை 25-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.