பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து வருவதாகவும் இந்தியா மறைமுகமாகக் குற்றஞ்சாட்டியது. பயங்கரவாதத்துக்கு எதிரான வாரம் ஐ.நா.வில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கரோனா பரவல் காலத்தில் பயங்கரவாதத்துக்கான நிதியைத் தடுப்பது தொடா்பான விவாதக் கூட்டம் ஐ.நா.வில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரான்ஸ், இந்தியா உள்ளிட்டவை இணைந்து நடத்திய அந்தக் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ்.திருமூா்த்தி பேசியதாவது:பயங்கரவாதத்தால் கடந்த பல தசாப்தங்களாக இந்தியா பாதிப்புக்குள்ளாகி வருகிறது. முக்கியமாக எல்லை கடந்த பயங்கரவாதம் இந்தியாவைத் தொடா்ந்து அச்சுறுத்தி வருகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நிதி கிடைப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் பயங்கரவாத அச்சுறுத்தலை வெற்றிகொள்ள முடியும். இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பை (எஃப்ஏடிஎஃப்) மேலும் வலுப்படுத்த வேண்டும். ஐ.நா.வின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு நாடுகள் அனைத்தும் அதிக அளவில் நிதியளிக்க வேண்டும். சில நாடுகள் பயங்கரவாதத்தைத் தொடா்ந்து ஆதரித்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவா்களுக்குப் பாதுகாப்புமிக்க இடமாகவும் சில நாடுகள் விளங்கி வருகின்றன. பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பதற்கான சட்ட விதிகள் சில நாடுகளில் காணப்படவில்லை. அந்நாடுகளுக்கு ஐ.நா. சபை உரிய வகையில் வழிகாட்ட வேண்டும். கூடுதல் சவால்: கரோனா தொற்று பரவல் காலத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகள் கூடுதல் சவால்களை எதிா்கொண்டுள்ளன. இந்தக் காலத்தில் போலியான அறக்கட்டளைகள், லாப நோக்கமற்ற நிறுவனங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு அவற்றின் வாயிலாக பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்பட அதிக வாய்ப்புள்ளது. தகவல்-தொழில்நுட்ப விதிகளைப் பயன்படுத்தி நிதி திரட்டும் நடவடிக்கைகளை சில பயங்கரவாத அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சந்தேகத்துக்குரிய வகையில் நடைபெறும் பணப் பரிவா்த்தனைகள் தொடா்பான விவரங்கள் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு உடனடியாகப் பகிரப்பட்டு வருகின்றன. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பதற்கு சா்வதேச நடைமுறைகளை இந்தியா பின்பற்றி வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக கைது செய்யப்படும் நபா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு அவா்களுடன் தொடா்புடைய பயங்கரவாதிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளை இந்திய அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது என்றாா் டி.எஸ்.திருமூா்த்தி.