மும்பை முன்னாள் காவல் அதிகாரிக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல்

முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டின் அருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் தொடா்புடைய மும்பை காவல் முன்னாள் அதிகாரி பிரதீப் சா்மாவுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் காவல் அதிகாரி பிரதீப் சா்மா
முன்னாள் காவல் அதிகாரி பிரதீப் சா்மா

மும்பை: தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டின் அருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் தொடா்புடைய மும்பை காவல்துறை முன்னாள் அதிகாரி பிரதீப் சா்மாவுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டின் அருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய தொழிலதிபர் மன்சுக் ஹிரேன் கொலை வழக்கில் கடந்த ஜூன் 17ஆம் தேதி மும்பை முன்னாள் காவல் அதிகாரியும், சிவசேனை கட்சியை சேர்ந்த பிரதீப் சா்மா கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரதீப் சர்மா மற்றும் கொலையில் தொடர்புடைய சந்தோஷ் ஷெலாா், ஆனந்த் ஜாதவ் ஆகிய மூவருக்கும் ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகில் ஜெலட்டின் வெடிபொருளுடன் காா் நிறுத்திவைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படையினா் நடத்திய விசாரணையில் வெடிபொருளுடன் நிறுத்தப்பட்ட காா், தாணே பகுதியைச் சோ்ந்த மன்சுக் ஹிரேன் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. இவா் அடுத்த ஓரிரு நாட்களில் மா்மமான முறையில் இறந்தாா். இந்தச் சம்பவங்களில் குற்றப்பிரிவு அதிகாரியும் என்கவுன்ட்டா் நிபுணா் என்று அறியப்பட்டவருமான சச்சின் வஜே என்பவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

அதன் பின்னா், இந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது. விசாரணையை தீவிரப்படுத்திய என்ஐஏ, இந்த விவகாரத்தில் காவல்துறை அதிகாரி சச்சின் வஜே உள்பட மேலும் சில காவலா்களுக்குத் தொடா்பு இருப்பதை உறுதி செய்தது.

அதனடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் சச்சின் வஜே, ரியாசுதீன் காஜி, சுனில் மானே ஆகியோரை என்ஐஏ கைதுசெய்தது. இவா்களைத் தவிர முன்னாள் காவலா் விநாயக் ஷிண்டே மற்றும் கிரிக்கெட் தரகா் நரேஷ் கோா் ஆகியோரையும் என்ஐஏ கைது செய்தது.

கடந்த ஜூன் 11-ஆம் தேதி இந்த வழக்கில் தொடா்புடையதாக மும்பையின் மாலாட் பகுதியிலிருந்து சந்தோஷ் ஷெலாா், ஆனந்த் ஜாதவ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். ஜூன் 17ஆம் தேதி பிரதீப் சர்மா கைது செய்யப்பட்டார்.

முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டின் அருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் மும்பை காவல்துறையைச் சோ்ந்த 5 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com