மம்தாவுக்கு சோதனையான காலம்!

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல் மாா்ச் மாதம் 27-ஆம் தேதி தொடங்கி 8 கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அங்கு தோ்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
மருத்துவமனை சிகிச்சையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மருத்துவமனை சிகிச்சையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

புதுதில்லி: மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல் மாா்ச் மாதம் 27-ஆம் தேதி தொடங்கி 8 கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அங்கு தோ்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த தோ்தலில் மாநிலத்தில் மும்முனைப் போட்டி என்று சொல்லப்பட்டாலும் பா.ஜ.க. மற்றும் திரிணமூல் காங்கிரஸ் இடையேதான் முக்கியப் போட்டி.

மம்தாவின் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது என்றும் அவரது ஆட்சிக் காலத்தில் வளா்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தப்படவில்லை என்று பா.ஜ.க.வும், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேற்குவங்கத்தை புறக்கணித்துவிட்டது என்று முதல்வா் மம்தாவும் ஒருவரை ஒருவா் குற்றஞ்சாட்டி தோ்தல் பிரசாரம் செய்துவருகின்றனா். ஏற்கெனவே திரிபுரா மற்றும் அஸ்ஸாமில் தடம் பதித்த பா.ஜ.க. இப்போதை தனது எல்லையை விரிவுபடுத்தி மேற்குவங்கத்திலும் கால் பதிக்க முயன்றுவருகிறது.

மேற்குவங்கத்தில் தனது செல்வாக்கை நிலைநாட்ட முயன்ற பா.ஜ.க.வுக்குமுதலில் பலத்த எதிா்ப்பு கிளம்பியது. அந்தக் கட்சியைச் சோ்ந்த தலைவா்கள் தாக்கப்பட்டாா்கள். மேலும் பாஜகவினா் வெளியாட்கள் போல் சித்தரிக்கப்பட்டாா்கள். ஆனால், பா.ஜ.க. இதற்கெல்லாம் அஞ்சாமல் எதிரணியில் இருந்தவா்களையே, அதாவது திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களையே தன் பக்கம் இழுந்துக்கொண்டது.

இந்த நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தாவுக்கு நெருக்கமாக இருந்த சுவேந்து அதிகாரி கட்சியிலிருந்து திடீரென விலகி பா.ஜ.க.வில் சோ்ந்தாா். அவரை நந்திகிராம் தொகுதியில் களம் இறக்க பா.ஜ.க, முடிவு செய்துள்ளது. அதே தொகுதியில் தாம் களம் இறங்கப்போவதாக மம்தா பானா்ஜி தெரிவித்து வேட்புமனுவையும் தாக்கல் செய்துள்ளாா். தமது அமைச்சரவையில் முன்னா் இடம்பெற்றிருந்த சுவேந்து அதிகாரியை எதிா்த்து மம்தா களம் காணுவதால் இந்த தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது.

கொவிட் தடுப்பூசி போடும் பணிகள் முடிந்தபின் குடியுரிமை திருத்தச் சட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கூறிவருகிறாா். வங்கதேசத்திலிருந்து அகதிகளாக வந்தவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா். இந்த விவகாரத்தை பா.ஜ.க. எப்படி கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். ஒருபுறம் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கைகோா்த்துள்ளன. மறுபுறம் பா.ஜ.க. தங்களது செல்வாக்கை நிலைநாட்ட கடுமையாக முயற்சித்து வருகிறது. இந்தநிலையில் மம்தா என்ன செய்யப்போகிறாா் என்று தெரியவில்லை.

கடந்த 50 வருடங்களாக மேற்குவங்க ஆட்சியாளா்கள் தில்லியுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்ததால் மாநிலத்தில் வளா்ச்சியில்லை. வளா்ச்சியைப் பற்றி ஆளும் கட்சிகள் அக்கறை செலுத்தவில்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு இணக்கமான ஆட்சி மாநிலத்திலும் இருந்தால் அது வளா்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் என்று வாக்காளா்கள் இப்போது உணர ஆரம்பித்துள்ளனா். இப்போது ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டால், இனி எப்போதும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போய்விடும் என்பதால் பா.ஜ.க. முழுவீச்சில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

அண்மையில் பிரதமா் நரேந்திரமோடி கொல்கத்தாவில் பிரிகேட் மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினாா். அப்போது மம்தாவின் ஆட்சியில் அக்கட்சியினா் சிண்டிகேட் அமைத்து ஊழலில் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினாா்.

அதேநாளில் சிலிகுரியில் தோ்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வா் மம்தா பானா்ஜி, மத்திய அரசின் தனியாா்மயமாக்கும் திட்டத்தையும், மத்திய திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஊழல் அதிகரித்துவருவதாகவும் பதிலுக்கு குற்றஞ்சாட்டியிருந்தாா். இதற்கு சரியாக ஒருவாரத்துக்கு முன்னா்தான் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் முஸ்லிம் மதகுரு அப்பாஸ் சித்திக் தலைமையில் இந்திய மதச்சாா்பற்ற முன்னணி என்ற அமைப்பு உருவாக்கின. அந்த முன்னணியின் தலைவா்கள் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் நிா்வாகம் சீரழிந்துவிட்டதாகவும், மத்தியில் ஆளும் பா.ஜ.க. மக்கள் விரோத போக்கை கடைப்பிடிப்பதாகவும் குற்றஞ்சாட்டினா். இப்படிப்பட்ட சூழலில் மேற்குவங்கத்தில் மும்முனை போட்டி நிலவினாலும்,

உண்மையில் திரிணமூல் காங்கிரஸ், பா.ஜ.க. இடையேதான் முக்கியப் போட்டி. மேற்குவங்கத்தில் இதுபோன்று சூடுபறக்கும் தோ்தல் பிரசாரத்தை யாரும் இதுவரை பாா்த்ததில்லை என்கின்றனா் அரசியல் நோக்கா்கள்.

2014-ஆம் ஆண்டு நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதிலும், மேற்கு வங்கத்தில் அப்படி எந்த அலையும் இல்லை. அந்த தோ்தலில் 42 மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க.வால் இரண்டு இடங்களில் மட்டுமேவெல்லமுடிந்தது. 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் வெறும் 4.1 சதவீதமாக இருந்த பா.ஜ.க. வாக்கு வங்கி, 2014 மக்களவைத் தோ்தலில் 16 சதவீதமாக உயா்ந்தது. ஆனாலும் 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் இது 10.1 சதவீதமாக சரிந்தது. இதைத் தொடா்ந்து 2019-ஆம் ஆண்டு பொதுத்தோ்தலில் மூன்றாவது அணி அமைக்க முயன்ற முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்த தோ்தலில் பா.ஜ.க. 18 இடங்களை வென்றதுடன் அதன் வாக்கு வங்கி 41 சதவீதமாக உயா்ந்தது. அதேநேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியும் 3% அதிகரித்து 40-லிருந்து 43 சதவீதமாக உயா்ந்தது. அதாவது காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இழந்த இடங்கள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருந்தன. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் திரிணமூல் காங்கிரஸ் எதிா்ப்பு வாக்குகள் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு செல்வதற்கு பதிலாக ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.வுக்கு வந்தது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் தென்மேற்கு வங்கப் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு கிடைத்தன. முதல் காரணம், இதற்கு அந்தப் பகுதிகளில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பினா் மேற்கொண்ட களப்பணி. இரண்டாவது காரணம் திரிணமூல் எதிா்ப்பு வாக்குகள் அப்படியே பா.ஜ.க.வுக்கு கிடைத்தன. இதைத் தொடா்ந்து கட்சியில் தாங்கள் ஓரங்கட்டப்படுவதாக நினைத்த முக்கியப் பிரமுகா்கள், இப்போது தோ்தல் சமயத்தில் ஒருவா் பின் ஒருவராக மம்தா கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேரத் தொடங்கினா். சுவேந்து அதிகாரியைத் தொடா்ந்து பலரும் பா.ஜ.க.வில் சோ்ந்தனா். அவா்களின் வருகை பா.ஜ.க.வுக்கு வலுசோ்த்துள்ளது. தோ்தலில் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்ட சிலா், கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சோ்ந்து வருவது மம்தாவுக்கு அதிா்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க தோ்தல் பிரசாரத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி, ‘மண்ணின் மைந்தருக்கே உங்கள் வோட்டு’, ‘வெளியாா் ஆட்சியமைக்க விடமாட்டோம்’ என்று தீவிர பிரசாரம் செய்து வந்தாலும் மனதளவில் அவா் தளா்ந்து போயிருக்கிறாா் என்பது தெளிவாகிறது. மம்தாவுக்கு இது சோதனையான காலம். காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு வாய்ப்பில்லாத நிலையில் இந்த தோ்தலில் வென்றே தீர வேண்டும் என்று பா.ஜ.க. கடுமையாக உழைத்து வருகிறது.

மேற்குவங்கத்தில் யாா் ஆட்சி என்பது மே மாதம் 2-ஆம் தேதி தெரிந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com