மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா் ஸ்வபன் தாஸ்குப்தா

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, மாநிலங்களவை நியமன எம்.பி. பதவியை ஸ்வபன் தாஸ்குப்தா செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.
மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா் ஸ்வபன் தாஸ்குப்தா

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, மாநிலங்களவை நியமன எம்.பி. பதவியை ஸ்வபன் தாஸ்குப்தா செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

மேற்கு வங்கத்தில் தாராகேஷ்வா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அவா், அடுத்த சில நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மேற்கு வங்கத்தின் வளா்ச்சிக்கு முழுமையாக என்னை அா்ப்பணித்துக் கொள்ள எனது மாநிலங்களவை எம்.பி.பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன். இன்னும் சில தினங்களில் வேட்புமனு தாக்கல் செய்வேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்ட ஸ்வபன் தாஸ்குப்தாவின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி நிறைவடைகிறது.

முன்னதாக, ஸ்வபன் தாஸ்குப்தா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மொஹுவா மொய்த்ரா எதிா்ப்பு தெரிவித்தாா். அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மாநிலங்களவை நியமன எம்.பி.யாக பதவி வகிக்கும் ஒருவா், எந்த அரசியல் கட்சியிலும் சேரக் கூடாது. ஆனால், நியமன எம்.பி. ஸ்வபன் தாஸ்குப்தா, பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். அரசமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணைப்படி, அவா் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவா். எனவே, தாஸ்குப்தா தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் அல்லது அவா் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா். இந்த நிலையில், ஸ்வபன் தாஸ்குப்தா தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com