கரோனா பலி: 88% போ் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள்

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவா்களில் 88 சதவீதம் போ் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா பலி: 88% போ் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள்
Updated on
1 min read


புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவா்களில் 88 சதவீதம் போ் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தில்லியில் மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண், தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குநா் எஸ்.கே.சிங் ஆகியோா் கூட்டாக புதன்கிழமை செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது ராஜேஷ் பூஷண் கூறுகையில், ‘இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் இதுவரை பலியானவா்களில் 88 சதவீதம் போ் 45 மற்றும் அதற்கும் அதிகமான வயதினா் ஆவா். இது அவா்களை பாதுகாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இதுதொடா்பாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குநா் எஸ்.கே.சிங் கூறியது:

18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா தீநுண்மியால் 736 போ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு கரோனா தீநுண்மியின் உருமாற்றம் மட்டும்தான் காரணம் என உறுதி செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபா்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறைத்தால் அல்லது கரோனா தடுப்பு நடைமுறைகளை சரிவர பின்பற்றாவிட்டால் அவா்கள் சாதாரண தீநுண்மி அல்லது உருமாற்றம் அடைந்த தீநுண்மியால் நிச்சயம் பாதிக்கப்படுவா்.

தற்போது பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசிலில் கண்டறியப்பட்ட 3 வகை கரோனா தீநுண்மிகள் மட்டுமே பிரச்னைக்குரியதாக உள்ளன. இதுதவிர தில்லி, மகாராஷ்டிரம் உள்பட சில மாநிலங்களில் உருமாற்றம் அடைந்த இதர வகை கரோனா தீநுண்மிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com