புது தில்லி: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான பணிகளை மேற்கொள்ள ராணுவ உதவி தேவைப்படுவதாக மத்திய அரசுக்கு தில்லி அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தில்லியில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 10,000 படுக்கை வசதிகளும், 1000 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளையும் கொண்ட மருத்துவமனைகளை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்த ராணுவ வீரர்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக, சுகாதாரத் துறை கடும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படுக்கை வசதிகளை ஏற்படுத்த ராணுவத்தை அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் மணீஷ் சிசோடியா.